திங்கள், 8 நவம்பர், 2010

பெரியார்

தந்தைப்பெரியார்



தோற்றம் - 17-9-1879
மறைவு-24-12-1973


ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பெரியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழக்கத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாக்க் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்பனியம், பெண்களைத்தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாக்க் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்களைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்), அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

வாழ்க்கை வரலாறு

  • 1879: செப்டம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர், சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
  • 1885:திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1891:பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
  • 1892:வாணிபத்தில் ஈடுபட்டார்
  • 1898:நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
  • 1902:கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
  • 1904:ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார்.(அக் குழந்தை ஐந்தாம் மாத்த்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை)
  • 1907:பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் க்க்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப் பணியாற்றினார்.
  • 1909:எதிர்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
  • 1911:தந்தையார் மறைவு
  • 1917:ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்


இளமைப் பருவம்

காவும் கழனியும் நிறைந்த காவிரி ஆற்றின் அரவணைப்பில் அமைந்திள்ள ஊர் ஈரோடு. மஞ்சளும், மாவும் செழித்த நகரம் ஈரோடு. யாரோடும் வம்பு பேச்மல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார் வெங்கட்ட நாயக்கர்.

வெங்கட்ட நாயக்கர் இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார். வசதியற்ற குடும்பம். எனவே, அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே கூலி வேலை பார்த்தார். கூலி பெற்றுத்தான் கூழ்கூடிக்க வேண்டிய நிலை. அவ்வளவு வறுமை. பதினெட்டு வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சின்னத்தாயம்மை.

வெங்கட்ட நாயக்கர் – சின்னத்தாயம்மை வாழ்க்கை வண்டி ஓடிற்று. வண்டிமாடு வைத்துப் பிழைத்தார். நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. வண்டி மாட்டை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு சிறிய அளவில் பலசரக்குக் கடையொன்றைத் துவக்கினார். கணவருடன் சேர்ந்து அவரது மனைவி சின்னத்தாயம்மையும் உழைத்துப் பாடுபட்டார். நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்தார். உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகள் உடைத்துக் கொடுத்தார். ஆமணக்கு விதையினின்று எண்ணெய் எடுத்து அதைக் காசாக்கினார். தம்பதிகள் இருவருமே சோம்பல் இன்றிப் பாடுபட்டார்கள். ஓய்வு இன்றி உழைத்தார்கள். நாளடைவில் கொடிகட்டிப் பறந்தார். சூரியனைக்கண்ட பனி விலகுவதுபோல் வறுமை அவர்களை விட்டு அகன்றது. செல்வமும் செழிப்பும் சேர்ந்தது.

உழைப்பினால் உயர்ந்த உன்னத தம்பதிகள் அவர்கள்.

வணிகப் பெருந்தகை வைணவ மத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். பக்திப் பெருக்கினால் இராமாயணம், பாகவதம் போன்ற கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார். தமது இல்லத்திலேயே பாகவதர்களுக்கும், சாதுக்களுக்கும் விருந்து அளித்து அவர்களை வணங்கி மகிழ்ந்தார்.

திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தைபேறு கிட்டவில்லை. கோயில்களுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டார்கள். இருவரும் விரதங்கள் மேற்கொண்டார்கள். அவர்களது பக்தி மேலும் வளரலாயிற்று.

இந்தச் சூழலில் 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓர் ஆண் மகவு பிறந்தது. கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு அகமகிழ்ந்தார்கள். அதன் பிறகு 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இரண்டாவது மகன் பிறந்தான். அந்த மகனுக்கு இராமசாமி என்று பெயர் சூட்டி கொண்டாடினார்கள்.

இராமசாமிக்கு இரண்டு தங்கைகள் உண்டு. அவர்கள் பொன்னுத்தாய -ம்மாள், கண்ணம்மாள் ஆவார்கள்.

இராமசாமி சின்னபாட்டி வீட்டில் வளர்ந்தான். பாட்டி அவனை தத்துப்பிள்ளையாக தந்துவிடுமாறு வெங்கட்ட நாயக்கரிடம் கேட்டார். அவர் தர மறுத்துவிட்டார். என்றாலும் இராமசாமி அந்தப் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.

பாட்டி வீட்டில் இராமசாமி அடித்த லூட்டிகள் ஏராளம். பாட்டி கண்டிப்புடன் வளர்க்காமல் கனிவுடன் மட்டுமே வளர்த்தார்கள். தாய்ப்பால் கிடையாது. தினமும் இராமசாமி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தான். பாட்டி வீட்டில் பெரும்பாலும் பழையதும், சுண்டக்கறியும்தான். உணவாக்க் கிடைத்தது. தின்பண்டம் வாங்கித்தின்பதற்கு வழி போதாது.

இராமசாமிக்கு ஆறுவயது நிரம்பியது. பாட்டியின் வீட்டில் வாழ்ந்த பையன் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றித் திரிந்தான். யாருக்கும் அடங்காதவனாக மாறினான். பெற்றோர்கள் மனம் வருந்தினர். எனவே இராமசாமியை சின்னப்பாட்டி வீட்டினின்று அழைத்து வந்துவிட்டார்கள்.

இராமசாமியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் அவன் போக்கிரி, குறும்புக்காரன் என்று பெயரெடுத்தான். படிப்பு அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. மற்ற பையன்களுடன் சண்டையிடுவான். சட்டென்று கோபத்தில் அவர்களை அடித்தும் விடுவான். அடிபட்ட மாணவன் ஆசிரியரிடம் முறையிடுவான்.

இராமசாமியைத் திருத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் அவனிடம்,

“இனி பிள்ளைகளை அடிப்பதில்லை” என்று ஆயிரம் தடவை எழுதிவா என்று தண்டனை வழங்குவார். இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல நூற்றுக்கணக்கான தடவைகள். இராமசாமி தண்ட எழுத்து வேலை (இம்போசிசன்) எழுதியது உண்டு.

இராமசாமி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இடைவேளையின் போது தண்ணீர் குடிப்பதற்காக ஆசிரியர் வீட்டுக்கு போவதுண்டு. அவர்கள் வீட்டில் தண்ணீரை அண்ணாந்து குடிக்கச் சொல்வார்கள். அப்படிக் குடிக்கும்போது மூக்கில் தண்ணீர் சிந்தி இருமல் வந்துவிடும். சட்டை முழுவதும் நனைந்துவிடும். அதுமட்டுமல்ல, அவன் தண்ணீர் குடித்த தம்ளரை கழுவி எடுத்துச் செல்வார்கள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் அவன் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் செல்வதில்லை.

பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்தான் சிறுவன் இராமசாமி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் வீட்டில் மட்டும்தான் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் சைவ உணவு சாப்பிடுபவர்கள். மற்றவர்கள் மாமிச உணவு சாப்பிடுபவர்கள். எனவே அங்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கத் தடை போட்டிருந்தனர் பெற்றோர். முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டில் தண்ணீர் குடித்தது அவன் வீட்டாருக்குத் தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, அவர்கள் கொடுத்த திண்பண்டங்களையும் அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டான்.

செய்தி அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. செந்தேளை கொட்டியதுபோல் அவர்கள் துடித்துப் போனார்கள். கோபத்தால் முகம் சிவந்து போனார்கள். சிறுவன் இராமசாமியை அடித்தார்கள். மேலும் கடுமையாக தண்டனை வழங்கினார்கள்.

இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டது. இரண்டு தோள்களிலும் இரண்டு விலங்குகள் பூட்டப்பட்டன. இதைத் தூக்கிச் சுமந்து அவன் பள்ளி செல்ல வேண்டும். இப்படி பதினைந்து நாட்கள் விலங்கு பூட்டப்பட்டு துன்பத்திற்கு ஆளானான் இராமசாமி.

இராமசாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தான். பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பள்ளியில் படித்தான். படிப்பறிவு வளரவில்லை; பகுத்தறிவு வளர்ந்தது.

பத்தாவது வயதிலேயே பகவானைப் பணிபவர்களைப் பார்த்து பரிகசிக்கத் தொடங்கினான் அவன். ஆனால், தந்தையைப் போல் தொழிலில் நாட்டம் இருந்தது. பார்த்தார் தந்தை; சிந்தித்தார். பிறகு சிறுவனின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவனைத் தொழிலில் பழக்கினார். பன்னிரண்டாவது வயதிலேயே ‘தரகு’ வர்த்தகத்தில் அவன் தலைசிறந்து விளங்கினான்.

கடையில் அவன் சுறுசுறுப்பாக வேலை செய்தான்.

மூட்டைகளுக்கு விலாசம் போடிவது, சரக்குகள் ஏலம் போடிவது இவைதான் இராமசாமி செய்த வேலை ஆகும்.

சிறுவன் பேச்சில் குறிப்பாக வியாபாரப்பேச்சில் கெட்டிக்காரன். யாரிடமும் விவாதம் செய்து வெற்றி பெறுவான். அவன் வீட்டில் எப்போதும் சாமியார்கள், புராணக்கதை சொலுபவர்கள். பிராமணர்கள், சமயப் புலவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் மகிழும் வண்ணம் விருந்து தடபுடளாக நடந்துகொண்டேயிருக்கும. இது சிறுவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. காரணமில்லாமல் அவர்கள்மீது வெறுப்பு வளர்ந்தது. அதன் காரணமாக கடவுள்மீது வெறுப்பும், கசப்பும் வளர்ந்தது. கடவுள் இல்லை. ஆனால் இந்தக் கூட்டம் கடவுள் இருப்பதாகக் கற்பனை செய்து, வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று எண்ணினான்.

எல்லாம் கடவுள் செயல். தலைவிதிப்படிதான் நடக்கும் என்பதை அவன் எதிர்த்தான். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்வது அவன் வழக்கமாயிற்று.

இராமசாமி தன் கடைக்குச் செல்லும் வழியில் இராமநாத ஐயர் என்பவர் ஒரு கடை வைத்திருந்தார். அவர் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதில் தீவிர நம்பிக்கைகொண்டவர். இராமசாமி அவரை மடக்க எண்ணினான். ஒரு நாள் அவர் கடையின் முன்பக்கம் நிழலுக்காகப் போடப்பட்டிருந்த தட்டியின் மூங்கில் காலைத் தட்டிவிட்டான். மூங்கில் தட்டி ஐயரின் தலையில் விழுந்துவிட்டது.

“ஏன் இப்படி செய்தாய்?” என்று இராமநாத ஐயர் கோபித்துக் கொண்டார்.

இராமசாமி புன்னகை செய்தான். தலைவிதிப்படி நடந்துள்ளது, எனவே தட்டி உங்கள் தலையில் விழுந்துவிட்டது. அப்புறம் “என்னை ஏன் திட்டுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிட்டான் பன்னிரண்டு வயது சிறுவன் இராமசாமி.

பள்ளியில் படிக்கும்போது பிற மத்த்தினர் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காகவும், தின்பண்டங்கள் சாப்பிட்டதற்காகவும் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சுயமரியாதைச் சுடராக, பகுத்தறிவு பகலவனாக விளங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடுப்பதற்காக அன்று அந்தச் சிறுவயதில் விலங்கு பூட்டப்பட்டாரோ என்னவோ?

எப்போதும் பஜனையும், பக்திப் பாடல்களும், ஆழ்வரார் பாசுரங்களும், கதா காலட்சேபங்களும் நிறைந்த இல்லத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கேட்டு மக்களை சிந்திக்கச் செய்த சமூக சீர்திருத்தவாதியாக அந்தச் சிறுவன் பரிணாமித்தான்.

அந்தச் சிறுவன்தான் ‘வெண்தாடி வேந்தர்’ என்று போற்றப்பட்டவர். விவேகமும், வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

தேரோடும் வீதிகளில் சுற்றித் திரிந்த அந்தப் பையன்தான்
ஊரோடு ஒத்துப்போகாமல், உயரிய சிந்தனைகளை
முன்வைத்து தமிழர்களின் தலைவராய்
உயர்த்தான் – அவர்தான் பெரியார்; ஈவெ.ரா. பெரியார்.

பள்ளி வாழ்க்கையைப் போல் அவரது பகுத்தறிவு வாழ்க்கையும் சுவையானது.

இல்லற வாழ்க்கை

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். பன்னிரண்டு வயதுச் சிறுவன் இராமசாமியின் வாழ்க்கையில் அது உண்மையாயிற்று.

பள்ளிப்படிப்பு ஏறவில்லை. எனவே கடையில் வேலை செய்யப் பழக்கினார் தந்தை. அங்கு தனது பேச்சுத்திறத்தால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தான் இராமசாமி. அவனது உற்சாகமான வார்த்தைகளால் வந்தவர்கள் வியப்படைந்தார்கள். ஐந்து ரூபாய் பொருளை எட்டு ரூபாய்வரை விலை ஏற்றி விற்கும் சாமர்த்தியம் இராமசாமிக்கு கைவந்த கலையாயிற்று.

“சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

என்ற குறளுக்கு ஏற்ப இராமசாமியின் வாதத்திறமை வருவோரை வாயடைக்கச் செய்தது.

வீட்டில் பாகவதர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், வேத பிராமணர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். அவர்கள் சொல்லும் இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்பார். தர்க்கம் செய்வார். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளிப்பார்கள். அப்பொழுதிலிருந்தே இராமசாமிக்கு இந்துமதப் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் இவற்றின்மீது வெறுப்பு உண்டாயிற்று. அதன் காரணமாக அவர் கடவுள் இல்லை, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்றும் உறுதியாக நம்பினார்.

வணிகத்தில் அவரது பேச்சுத்தன்மையால் வியாபாரம் பெருகிற்று.

கடைக்கு கணக்கு எழுதவும் தந்தையார் கற்றுக் கொடுத்தார். கடைக்கு வருபவர்களிடமும் தர்க்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்த இளம்வயதிலேயே அவரது பேச்சுத்திறன் குறிப்பாக தர்க்கம் செய்யும் ஆற்றல் தடையின்றி வளர்ந்தது. பின்னாளில் அவரது அழுத்தந் திருத்தமாக அரசியல் சொற்பொழிவுகளுக்கு அதுவே காரணமாயிற்று.

வியாபார நேரம்போக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர்சுற்றத் தொடங்கினார். காவிரி ஆற்றுப் படுகையில் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்து களித்தார். பெற்றவர்கள் கவலைப்பட்டார்கள்.

விளையாட்டாய்க் காலம் ஓடிற்று. இராமசாமிக்கு வயது பத்தொன்பதாயிற்று. திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எண்ணினர்.

இராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். இராமசாமி தனது உறவுக்காரப் பெண் நாகம்மையை மணக்க விரும்பினார். சிறுவயது முதலே நாகம்மையுடன் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவர். எனவே, அவர் அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

பெற்றோர்கள் சொல்லுக்கு எதிர்சொல் சொல்லாத கடுமையான காலம் அது. அவர்கள் பார்த்துப் பேசும் பழக்கமும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில் இராமசாமி தன் விருப்பத்தில் உறுதியாக நின்றார். புரட்சியின் வேர்கள் அப்போதே முளைவிடத் தொடங்கின.

நாகம்மைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தெடங்கினர். இராமசாமி படிக்காதவர்; ஊர் சூற்றித்திரிபவர்; எனவே அவருக்குத் திருமணம் செய்து வைக்க நாகம்மை வீட்டில் சம்மதிக்கவில்லை.

நாகம்மையின் வயது 13. ஆனால், அவருக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வயதோ 50க்கு மேல். அதுவும் இரண்டு முறை திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். எனவே இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நாகம்மை.

“மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என்று நாகம்மையார் தன் அப்பா, அம்மாவிடம் தெளிவாக்க் கூறிவிட்டார்.

வேறு வழி இன்று நாகம்மையின் பெற்றோர் இராமசாமிக்கே தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தனர்.

போராட்டமே வாழ்க்கை நியதியாக்க் கொண்டவர் தந்தை பெரியார். இளமையில் திருமணம்கூட போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் இடையெதான் நடைபெற்றது.

அன்றைய நாளில் இளம் வயது திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இராமசாமியை இனி நாமும் மரியாதையுடன் பெரியார் என்றே அழைப்போம். திருமணம் நடந்து விட்டாலே பெரிய ஆள்தானே!

பெரியார் – நாகம்மையார் இல்லறம் பிறர்க்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது எனலாம்.

கணவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டார் நாகம்மையார்.

பெரியார் வீட்டில் யாரும் மாமிச உணவு சாப்பிடமாட்டார்கள். ஆனால், பெரியாரோ மட்டன் பிரியாணி என்றால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார். அவருக்கு சைவ உணவு பிடிக்காது. எனவே கணவருக்காகத் தனியாக அசைவ உணவு சமைப்பார் நாகம்மையார்; நாகம்மையார் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். சைவ உணவுதான் சாப்பிடுவார். பெரியாருக்கு விரதம் இருப்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது.

ஒருமுறை நாகம்மையார் சமைத்து வைத்திருந்த சைவ உணவில் அவர் அறியாதவாறு ஒரு எலும்புத்துண்டை மறைந்து வைத்துவிட்டார் பெரியார். நாகம்மையார் பூஜை முடித்து சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எலும்புத்துண்டு தலை நீட்டியது. நாகம்மையார் பதறிப்போனார். இது தன் கணவன் வேலை எனபதையும் உணர்ந்து கொண்டாள்.

அன்றோடு நாகம்மையின் விரதம் போயிற்று. சைவ உணவு சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது.

பெரியார் கொஞ்சம் கொஞ்சமாக தன் இல்லத்தரசியாரை தன் கொள்கைகளுக்கு மாறச் செய்தார். தனது தந்திரமிக்க நடவடிக்கைகளால் நாகம்மையார் கோயிலுக்குச் செல்வதையும் அறவே தடுத்து நிறுத்திவிட்டார்.

நண்பர்களுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து, அரட்டை அடிப்பது மட்டும் ஓயவில்லை. அங்கேயிருந்துகொண்டே சாப்பாடு தயார் செந்து கொடுத்துவிடு என்று நாகம்மையாருக்குச் சொல்லிவிடுவார். நாகம்மையாரும் ருசியாக சமைத்து பாத்திரங்களில் நிரப்பி சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இப்படி செய்வது மாமனார், மாமியாருக்குப் பிடிக்காது என்றாலும் அவர்களுக்குத் தெரியாமல் சாப்பாடு கொடுத்து விடுவார். இவ்வாறு பெரியாரின் விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த மனைவியாக அவர் வாழ்ந்து வந்தார்.

பெரியார் மிகுத்த சிக்கனவாதி; காசை எண்ணி எண்ணிதான் செலவழிப்பார். வீட்டில் சமையலிலும் சிக்கனம் வேண்டும் என்று எண்ணுவார். தேவையில்லாமல் இரண்டு காய்கள் வைத்தால் கோபித்துக்கொள்வார். காபிக்குப் பால் அதிகம் ஊற்றினால், பாலை ஏன் இப்படி வீணாக்குகிறாய்? சிறிது பால் ஊற்றினாலே போதுமே என்பார்.

சில வேளைகளில் “பாலைவிட மோரே உடம்புக்கு நல்லது” என்றுகூட சொல்லுவார்.

நாகம்மையார் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த உணவில் சிக்கனத்தை மட்டும் கடைபிடிக்க தயக்கம் காட்டினார். வீட்டிற்கு வருபவர்களுக்கு வயிறார உணவு பரிமாறி உபசரித்தார். அதே சமயம் வேண்டுமென்றே பெரியாருக்கு சிறிதளவே காய்கறிகள் வைப்பார். இதனால் நாளடைவிலை நாகம்மையார் செய்யும் சமையலில் மட்டும் அவ்வளவாக தலையிடுவதில்லை.

இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும், நாகம்மையார் சுடச்சுட உணவு தயாரித்து விருந்தளித்து விடுவார். அவரது விருந்தோம்பல் பணியைப் பாராட்டாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.!

பெரியாரின் பொதுவாழ்விலும் நாகம்மையார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் மேற்கொண்ட எல்லாப் பராட்டங்களிலும் கலந்துகொண்டார். பெரியார் அவர்களின் பொது வாழ்வின் வெற்றிக்கு அவர் பெரிதும் உதவினார்.

திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது. பெரியார் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் ஒருநாள் -

வாழ்க்கையில் வெறுப்புற்று, பெரியார் வீட்டைவிட்டு வெளியேறினார். யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் ஊர் விட்டுப் புறப்பட்டார்.

பெரியார் துறவியானார்!

இந்நிகழ்ச்சியை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?

எந்தக் குறையும் இல்லை.

செல்வமும் செழிப்பும் செறிந்த வாழ்க்கை …

ஆனாலும்,

பெரியார் துறவியானார்!

அது தனி வரலாறு, காசி முதலான இடங்களுக்குச் சென்று திரும்பினார் பெரியார்.

சித்தனையாளர் – சீர்திருத்தவாதி பெரியார், மூடப்பழக்க வழக்கங்களை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று அரும்பணியாற்றியவர். தான் உணர்ந்த உண்மைகளை ஊருக்கு எடுத்துரைக்க தயங்காதவர்.

சொற்பொழிவுகள் மூலம் மக்களின் அறியாமையைப் போக்கி பகுத்தறிவை வளத்தவர் பெரியார். 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தம் அன்புத் துணைவியார் நாகம்மையாருடன் மலேயா பயணம் செய்தார். அதுதான் முதல் மலேயா பயணம். அங்கு அவர் பினாங்கு, கோலாலம்பூர் தைப்பிங், மூவார், மாக்கா… போன்ற ஊர்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

பெரியார்- நாகம்மையார் இல்லற வாழ்க்கை இயல்பாகத்தான் சென்று கொண்டிருந்தது. காரியம் யாவினும் கை கொடுக்கும் காரிகையாகத்தான் நாகம்மை விளங்கினார்


துறவு வாழ்க்கை

இறை நம்பிக்கையோ, மறை நம்பிக்கையோ இல்லாதவர் பெரியார். நிறைவாழ்வு வாழ்ந்தவர். அவரது சிக்கனம் எக்கணமும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஆடை அணிகலன்களில் அக்கறை செலுத்தமாட்டார். சட்டை அழுக்கடைந்தால் அதைப்பற்றி கவலைப்படமாட்டார். குளிக்க மாட்டார். வாரம் ஒரு மறை குளிப்பதே அரிது. விலையுயர்ந்த உணவுப் பண்டங்களுக்கு ஆனைப்படுவது கிடையாது. சாலையோரக் கடைகளில் கிடைப்பதை வாங்கி சாப்பிடுவார். பொதுவாக ஒரு துறவி போலவே வாழ்ந்தார். திடீரென ஒலு நாள் துறவியாக மாறிவிட அவர் மனம் நாட்டம் கொண்டது.

பெரியாரின் சில நடவடிக்கைகளை அவர் அப்பா கண்டித்தார். இது பெரியாருக்குப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே குழந்தை இறந்த மனத்துயரம். இந்தச் சூழ்நிலையில் ஈரோடு விட்டுப் புறப்பட்டார்.

தங்கை கணவருடன் காசிக்குச் செல்ல ஈரோடு புகைவண்டி நிலையம் வந்தார். அங்கே இவர்களுடன் பெரியாரின் நண்பர் ஒருவரும் சேர்ந்துகொண்டார்.

மூவரும் ஈரோட்டிலிருந்து சென்னை சென்றடைந்தனர். சென்னையில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை பெரியார் பார்த்துவிட்டார். அவர் கண்களில் படாமல் மறைந்து ஒதுங்கினார். உடன் வந்த இருவரும் ஊர் திரும்பி விடலாம் என்றார்கள். ஆனால், பெரியார் காசிக்குச செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்றார். எனவே, கூட வந்தவர்களுக்குச் செலவுக்கு பணம் கொடுத்தார். அவர்களை ஈரோட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டார். அவர் மட்டும் தனியே புறப்பட்டார்.

பெரியாரிடம் தங்கநகைகள் இருந்தன. அவற்றை பத்திரமாக வைத்துக்கொண்டார். கையிலிருந்த பணத்தைக்கொண்டு பெஜவாடா வரை புகைவண்டியில் பயணம் மேற்கொண்டார்.

பெஜவாடாவிலை சத்திரம் ஒன்றில் தங்கினார். அந்தச் சத்திரத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். எனவே, பெரியார் அங்கே தங்கினார்.

சத்திரத்தில் தங்கியிருந்தபோது கோயமுத்தூரைச் சேர்ந்த தளபதி என்பவரும், தஞ்சையைச் சேர்ந்த வேங்கட்ட ரமண ஐயர் என்பவரும் பெரியாருக்கு நண்பர் ஆனார்கள். மூவருமே காசிக்குச் செல்ல திட்டம் தீட்டினார்கள். ஆனால், செலவுக்கு போதுமான பணம் இல்லை. எனவே அவர்கள் பெஜவாடா விட்டுப் புறப்பட்டு ஹைதராபாத் சென்றார்கள்.

ஹைதராபாத்தில் பிராமண நண்பர்கள் இருவரும் அரிசியை பிச்சையாகப் பெற்று வந்தார்கள். பெரியார் உண்டியல் குலுக்கி காசு சம்பாதித்தார். கிடைத்த அரிசியைக்கொண்டு, மூவரும் சமைத்து சாப்பிட்டார்கள்.

வயிறு நிறைந்த பின்னர், மூவரும் வாதம் செய்வதில் ஈடுபட்டனர். பிராமண நண்பர்கள் இருவரும் ஆத்திகம் பேசுவார்கள். பெரியார் நாத்திகக் கருத்துகளை எடுத்துக்கூறி அவர்களின் விவாதங்களை மறுத்துப் பேசுவார். தெருவில் போவோர், வருவோர் இவர்களின் விவாதங்களைக் கேட்டு ரசித்து மகிழ்வார்கள். அப்படி இவர்களது உரையாடலை கேட்டு மகிழ்ந்தவர்களில் ஒருவர் முருகேச முதலியார். அவர் சொந்த ஊர் காஞ்சிபுரம். ஹைதராபாத் சமஸ்தானத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி வந்தவர்.

முருகேச முதலியார் பெரியாரையும் அவரது இரு நண்பர்களையும் தம் வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்தார். அவரது இல்லத்திலேயே தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். மூவரும் வழக்கம்போல் பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தார்கள்.

இதனைக் கண்ட முதலியார் மனம் கலங்கினார். பின்னர் அங்குள்ள தமிழர்களின் உதவியோடு பணம் வசூல் செய்து கொடுத்தார்.

நாளுக்கு நாள் இவர்களது பெருமை உயரலாயிற்று. ரங்கநாதம் நாயுடு என்பவர் இவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு கதா காலட்சேபம் செய்யச் சொன்னார்.

பிராமண நண்பர்களில் ஒருவரான தளபதி ஐயர் இராமாயணத்தை வடமொழியில் படிப்பார். வேங்கட்ட ரமண ஐயர் அதைத் தமிழில் விளக்கிக் கூறுவார். ஹைதராபாத்திலே உள்ளவர்களுக்குத் தெலுங்குதான் தெரியும். பெரியாருக்குத் தெலுங்கு பேசத் தெரியும். எனவே, அவர் நண்பர்கள் கூறும் இராமாயணக் கதையை தெலுங்கில் மொழிபெயர்த்துச் சொல்வார்.

பெரியாரின் மொழிபெயர்ப்பு, விறுவிறுப்புடன் அமைந்திருக்கும். தளபதி ஐயர் சொல்வதை அப்படியே மொழிபெயர்க்காமல் நகைச்சுவையோடு செய்திகளைக் கூறுவார். குட்டிக் கதைகள் சொல்வார். தனது நாத்திகக் கருத்துகளை நயமாகச் சேர்த்து விடுவார். கூட்டம் பெரியாரின் பேச்சில் மயங்கிக் கிடந்தது.

நாட்கள் நகர்ந்தன. மூவரின் காசி ஆசை வளர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு நாள் ஹைதராபாத் நகர் விட்டுப் புறப்பட்டார்கள்.

பெரியாரிடம் முருகேச முதலியார் மிகுந்த அன்பு கொண்டவராய் இருந்தார். எனவே அவர் பெரியாரிடம், பிராமண நண்பர்களுடன் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், பெரியாரோ அதற்குச் சம்மதிக்கவில்லை. என்னோடு வந்த அவர்களைப் பாதியில் விட்டுச் செல்வது சரியல்ல என்று கூறிவிட்டார்.

பெரியாரிடம் தங்கநகைகள் இருந்தன. அவற்றைக் காசிக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றார் முதலியார். அதனை ஏற்றுக்கொண்டார் பெரியார். நகைகளை அவரிடமே ஒப்படைத்தார். என்னென்ன நகைகள் அவரிடம் கொடுக்கப்பட்டன என்பதையும் ஒரு சீட்டில் எழுதி வாங்கிக்கொண்டார். ஒரே ஒரு மோதிரம் மட்டும் அணிந்துகொண்டார்.

காசிக்குச் செல்லம் வழியில் மூவரும் கல்கத்தாவில் முப்பது நாட்கள் தங்கினார்கள். சுவாமி விவேகானந்தரும், சுபாஸ் சந்திரபோஸும் வாழ்ந்த கல்கத்தா நகரை சுற்றிப் பார்த்தார்கள். கல்கத்தாவில் நகரத்தார்கள் நிறைய வசித்தார்கள். அவர்களிடம் பண உதவி பெற்று மூவரும் காசி வந்தடைந்தார்கள்.

காசி இந்துக்களின் புண்ணியத்தலம் என்று காலங்காலமான நம்பிக்கை. கங்கையாறு கரைபுரண்டோடும் காட்சி.. காண்போரை கவர்ந்திழுக்கும்.. காசியில் கங்கைக் கரையில் உள்ள அறுபத்து நான்கு புனித நீராட்டு இடங்களில் மூவரும் நீராடினார்கள். கோயில்களுக்குச் சென்றார்கள். காசி அரண்மனையைச் சுற்றிப் பார்த்தார்கள்.

கங்கையில் நீராடினால் பாவங்கள் கரையும் என்பது நம்பிக்கை. அது உண்மையோ, பொய்யோ பெரியாது. மூவரின் கையிலிருந்த காசு கரையத் தொடங்கிற்று.

காசிக்கு வந்தவர்கள், காசில்லாமல் ஆனார்கள்.

பிராமண நண்பர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். பெரியார் தனித்து விடப்பட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. ஒவ்வொரு சத்திரமாக ஏறி இறங்கினார். எல்லா சத்திரங்களிலும் சாப்பாடு போட்டார்கள். ஆனால், பெரியாருக்கு மட்டும் சாப்பாடு கிடைக்கவில்லை…… காரணம்?

அந்தச் சத்திரங்களில் பிராமணர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்பது விதி. பிராமணர் அல்லாதவர்களுக்குப் பச்சைத் தண்ணீர் கூட தரமாட்டார்கள். பசியின் கொடுமையால் கூட்டத்தில் முண்டி அடித்து ஒரு சத்திரத்தினுள் சென்றுவிட்டார் பெரியார். இவரது மீசையையும், தலை முடியையும் பார்த்து அங்கிருந்தவர்கள் இவரை விரட்டிவிட்டார்கள்.

பெரியார் கோபத்துடன் வெளியே வந்தார். அந்த நேரம் சாப்பிட்ட எச்சில் இலைகளை வெளியே கொண்டுவந்து போட்டார்கள். பார்த்தார் பெரியார். அந்த எச்சில் இலைகள் நடுவே உட்கார்ந்தார். இலைகளில் மிச்சமாகியிருந்த உணவுப் பொருட்களை எடுத்துச் சாப்பிட்டார். என்னே கொடுமை!

பசித்துன்பம்.

பெரும் பணக்காரர், வள்ளல் பரம்பரை. வீட்டிற்கு வருவோர்க்கெல்லாம் விருந்து படைத்து மகிழும் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெரியார் எச்சில் இலையை உண்டார். இந்தக் கொடுமை அவராகத் தேடிக்கொண்டது.

அவர் அதற்காக வருந்தவில்லை. பசியின் பாதிப்பால் மற்றொரு உண்மையையும் பெரியார் உணர்ந்தார். அந்தப் பாதிப்பு அவரை வெகுவாக பாதித்தது. அது என்ன பாதிப்பு?

எங்கு சென்றாலும் பிராமணர்களுக்குத்தான் உணவு அளித்தார்கள். பிராமணர் அல்லாதவர்களை விரட்டியடித்தார்கள். இந்தச் செயல்கண்டு வெகுண்டார் பெரியார். கோபத்தில் கொதித்துப் போனார்.

புண்ணியம் தேட வந்த இடத்தில் கூடவா ஏற்றத்தாழ்வு பார்ப்பது? என்ன மனிதர்கள்? என்று மனம் வெதும்பினார்.

பெரியாரின் ஆழ்மனத்தில் பிராமண எதிப்பு வெறுப்பு, வேர் ஊன்றியது. காலம் செல்லச் செல்ல…. வேர் முளைவிட்டு….. செடியாகி….. மரமாகி……. கிளை பரப்பியது…..!

இவ்வளவு இன்னல்களுக்கு இடையேயும் பெரியார் தன் கையில் இருந்த மோதிரத்தை விற்கவோ அடகு வைக்கவோயில்லை…. அதுதான் சிக்கனம். அவர்தான் பெரியார்.

பெரியார் மொட்டையடித்துக்கொண்டார். மீசையை எடுத்து விட்டார். பட்டை போட்டுக்கொண்டார். பண்டாரம் ஆனார் பெரியார். பரதேசிக் கோலத்தோடு காசியில் பலவகையிலும் துன்பங்களுக்கு ஆளானார்.

சைவமடம் ஒன்றில் வேலை பார்த்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கங்கை கரையில் இறந்து போனவர்களை எண்ணி சில கருமங்கள் செய்ய வருவார்கள். அவர்கள் போடும் சோற்றுப் பிண்டங்களை எடுத்துச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார். இப்படி நாற்பது நாட்களை ஓட்டினார்.

காசியில் மதத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை நேரில் கண்டார். மக்களை ஏமாற்றி ஆத்திகர்கள் பணம் பிடுங்குவதைப் பார்த்து பிணங்களை எரிக்கும் இடத்தில்கூட இலஞ்சம் வாங்குவது கண்டு துடித்துப் போனார்.

காசிக்குச் சென்றால் கதி மோட்சம் கிடைக்கும் என்பார்கள். பெரியார் காசிக்குச் சென்றதால், தமிழர்கள் வாழ்வில் நற்கதி அடைந்தார்கள் என்பதுதான் அந்த வரலாறு காட்டும் உண்மை.

காசியை கால் தூசியாக மதித்து, கடும் கோபத்துடன் காசிவிட்டுப் புறப்பட்டார் கல் நெஞ்சர் பெரியார். தங்க மோதிரத்தை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு அஸ்ஸம் சூல், பூரி ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் எல்லூர் சென்றார்.

எல்லூரில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் இல்லத்தில் தங்கினார். அங்கே பெரியார் ஒரு மாதம் தங்கினார்.

ஈரோட்டில் பெரியாரின் தந்தை, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக… பெரியாரை வலை வீசித் தேடினார்கள். ஈரோட்டு வியாபாரி ஒருவரால் பெரியார் எல்லூரில் இருப்பதை தந்தையார் அறிந்தார். உடனே அவர் எல்லூர் சென்று பெரியாரைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதார்.

ஊருக்குப் புறப்பட்டனர்.

அங்கே முதலியாரிடம் கொடுத்து வைத்திருந்த தங்க நகைகள் வந்து சேர்ந்தன. இவ்வளவு துன்பங்களிலும் பையன் நகைகளை விற்றுவிடாமல் காப்பாற்றியிருக்கிறானே என தந்தையார் வியந்தார்.

பெரியாரை அழைத்துக்கொண்டு தந்தை வெங்கட்ட நாயக்கர் ஈரோடு வந்தடைந்தார்


காலக் கணக்கீடு


வாழ்நாள்


ஆண்டுகள்

: 94(3 மாதங்கள் 7 நாட்கள்)

மாதங்கள்

: 1131

வாரங்கள்

: 4919

நாட்கள்

: 34,433

மணிகள்

: 8,26,375

நிமிடங்கள்

: 4,95,82,540

விநாடிகள்

: 297,49,52.400

சுற்றுப்பயணம்


நாட்கள்

: 8200

வெளிநாடுகளில்

: 392

தொலைவு

: 8,20,000 மைல்கள்

ஒப்பீடு

: பூமியின் சுற்றளவைப்போல் 33 மடங்கு பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு. தம் 95 ஆம் வயதில், அவர் வாழ்ந்த 98 நாட்களில், 35 நாட்கள் சூறாவளிப் பயணம் செய்தார்.






கருத்துரையும் நிகழ்ச்சிகளும்


கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்

: 10,700

கருத்துரை ஆற்றிய காலம்

: 21,400

நாட்கணக்கில்

: 891

நிமிடங்களில்

: 12,84,000

விநாடிகளில்

: 77,04,000

சிறப்புக் குறிப்பு:அத்தனைச் சொற்பொழிவையும் ஒலி நாடாவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்

நட்புக்கடல்

“பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா” என்று பாராட்டுவார் ஏ.எஸ்.கே அய்யங்கார்.

ஏ.எஸ்.கே. அய்யங்கார் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவராவார். சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர்.

“பெரியார் ஈ.வெ.ரா பிராமணர்களை வெறுப்பவர் கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. பெரியார் பிராமணீயத்தைத்தான் எதிர்த்தார். அதாவது கடவுள் மற்றும் புராணங்கள், இதிகாசங்களைப் போற்றும் அந்தக் கொள்ளையைத்தான் எதிர்த்தார்” என்று ஏ.எஸ்.கே. அய்யங்கார் தெளிவுபடுத்தியுள்ளார். அதுதான் உண்மையும் ஆகும்.

பெரியார் ஒரு நட்புக்கடல். அவருடன் நட்புக்கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் பெரியாரைப் பாராட்டியே வந்துள்ளனர். அப்படி அவரிடம் நட்புக்கொண்டவர்களில் பிராமணர்களும் உண்டு. குறிப்பாக மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பெரியாருடன் நெருங்கிய நட்புக்கொண்டு பழகி வந்தார். ராஜாஜி அவர்கள் தனது இறுதிக்காலம் வரை பெரியாருடன் நட்பு பாராட்டி வந்தார்.

“அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்ல்ல் உழ்ப்பதாம் நட்பு”

என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர் பெரியார்.

அறசியல் வேறு; மனிதாபிமானம் வேறு. இரண்டையும் ஒன்றாக்க் கலக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பெரியார்.

பிறர் மனம் தனிப்பட்ட முறையில் புண்பட்டுவிடக்கூடாது என்பதிலும் பெரியார் உறுதியாக இருந்தார். அதனால்தான் அவரால் ராஜாஜி அவர்களுடன் இறுதிக் காலம்வரை நட்புடன் உறவாட முடிந்தது.

ராஜாஜி அவர்கள் மறைவின்போது கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார் பெரியார். தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சுடுகாடுவரை சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அப்போது பெரியார் அவர்களால் நடக்க முடியாத சூல்நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் பெரியார். தலைநகர் தில்லியிலிருந்து அன்றையக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களும் ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவர் உட்காருவதற்கு இருக்கை இல்லை. உடனே சற்றும் தாமதியாது தனது உடல் துன்பத்தையும் மறந்து தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் உட்காரும்படி வேண்டினார் பெரியார்.

பெரியார் நட்புக்கடல் மட்டுமல்ல. பண்பாட்டுக் காவலரும் ஆவார்.

தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் பெரியாரின் பாசத்திற்குரிய நண்பர்களில் ஒருவராவார்.

திரு.வி.க. அவர்கள் ஒருமுறை பெரியாரின் இல்லத்தில் விருந்தினராக தங்கினார். இரவு நீண்ட நேரம் நண்பர்கள் இருவரும் உரையாடி மகிழ்ந்தார்கள். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து காலைக் கடன்களை முடித்தார்; குளித்தார்; உடை மாற்றினார்.

அந்த நேரம் –

பெரியார் அவர்கள் திரு.வி.க. முன்பு திருநீற்றுச் சம்படத்தை நீட்டினார். திரு.வி.க வியந்து போனார்.

“நீங்கள் கடவுளை நம்பாதவர். உங்கள் வீட்டில் திருநீறு எப்படி வந்தது?” திரு.வி.க திகைப்புடன் கேட்டார்.

“நான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் தாங்கள் கடவுள் நம்பிக்கைகொண்டவர். எனது விருந்தாளியாக வந்து தங்கியுள்ளீர்கள். விருந்தினரின் விருப்பம் அறிந்து செயல்படுவது தான் நல்லது” என்று பெரியார் விளக்கம் அளித்தார்.

திருநீறு பூசிய தமிழ்த்தென்றல் திரு.வி.க., புரட்சிப்புயல் பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ஆனாலும் பெரியார் மனத்தில் வேறோரு வேதனை தோன்றியது. அது தொழிலாளர்களின் தோழர் பொதுத்தொண்டே வாழ்வெனக்கண்ட பெருந்தகையாளர் திரு.வி.க அவரது மறைவின்போது கூட்டம் குறைவாக இருப்பது கண்டு பெரியார் துடித்துப் போனார். அடுத்த வினாடியே திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரையும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கட்டளையிட்டார். அதுமட்டுமல்ல,

“நமச்சிவாய வாழ்க. . .
நாதன்தாள் வாழ்க . . .

என்று திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

பெருந்தன்மையின் உச்சியில் பெரியார் நின்றார் என்பதையே நாம் இச்சம்பவத்தால் உணரலாம். இப்படி ஒரு மனிதன் இனிவரும் நூற்றாண்டில் தோன்றுவானா? மனம் விடை காணமுடியாமல் தவிக்கிறது.

ஏழை மக்களின் துயர் துடைகப் பல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தியவர் காமராஜர்; கர்மவீரர் காமராஜர். ஏழைப்பங்காளர் என்று போற்றப்பட்டவர் காமராஜர். தாழ்த்தப்பட்ட மக்கள், பாட்டாளி மக்கள், விவசாயத் தோழர்கள் எல்லோரும் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். பள்ளி மாணவர்கள் வறுமையின் காரணமாக படிப்பைப் பாதியில் விட்டு விடும் கொடுமையை அறிந்தார். காமராஜர் கல்விதான் மனிதனுக்கு அழியாத சொத்து என்றார் அவர். எனவே அவர் பள்ளி மாணவர்களுக்கு பசி போக்கிட மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பசிப்பிணி போக்கினார். அதே சமயம் அறியாமையையும் நீக்கினார். ஏழை மாணவர்கள். பின்தங்கிய மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார். எனவே அவர் “கல்விக் கண் திறந்த காமராஜர்” எனப் பாராட்டப் பெற்றார்.

காமராஜர் தமிழர்; பச்சைத் தமிழர், தமிழர் ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராகத் திறம்படப் பணியாற்றுகிறார். அதுவும் திராவிடர் கழகத்தின் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கிறார் என்படை உணர்ந்த பெரியார் காமராஜருக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

கருப்புச்சட்டை அணியாத பெரியாரின் தொண்டர் என்று கூட காமராஜர் அழைக்கப்பட்டார். காமராஜர்-பெரியார் நட்பு காலத்தால் மறக்கப்படாதது. காமராஜர் தமிழக மிதல்வராக எட்டாண்டு காலம் சீரிய முறையில் தொண்டாற்றினார். பெரியார் அவர்கள் எட்டாண்டு காலம் எல்லா வகையிலும் காமராஜருக்கு துணைநின்றார்.

திராவிடர் கழகத்தின் சுயமரியாதை சிந்தனை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விரைவாகப் பரவத் தொடங்கிற்று. பெரியாரின் புரட்சிகரமான பேச்சும் எழுத்தும் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்தது.

பெரியாரின் கொள்கைகளில் பெரிதும் மனம் பறி கொடுத்தவர்கள் பட்டியலை எழுதினால் பக்கங்கள் போதாது.

பேரறிஞர் அண்ணா, நாற்பதாண்டுக் காலமாக பெரியாருடன் பழகியவர். அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சைக் கேட்டு அசந்தவர்கள் ஏராளம். அடுக்குமொழியில் வசனங்கள் எழுதுவதில் அவருக்கு இணை அவரே.

கலைஞர் கருணாநிதி அண்ணாவின் வழியில் எழுதியும் பேசியும் வந்தார். அஞ்சா நெஞ்சமும் சொல்வன்மையும்கொண்ட இளைஞர் அணி அன்று பெரியாருக்குத் துணை நின்றது.

வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் ஏற்படுவதுபோல பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் வாழ்விலும் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும்தானே!

பெரியாரின் குடும்ப வாழ்விலும் ஒரு திருப்பம் வந்தது. பெரியாரின் அன்பு மனையாட்டி திருமதி. நாகம்மையார் இறந்துவிட்டார். அதன்பிறகு பெரியார் திடீரென மறுமணம் செய்து கொள்ள எண்ணம் கொண்டார்.

திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட மணியம்மை என்ற பெண்மணியை 9-7-1949 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அப்போது பெரியாருக்கு வயது 72. மணியம்மையோ 26 வயது நிரம்பிய குமரிப்பெண்.

பெண் உரிமை, பெண் விடுதலை என்று பேசியும், எழுதியும் வரும் பெரியார் இப்படிச் செய்த்து கழகத்தில் உள்ள இளைஞர்களுக்குப் படிக்கவில்லை. கடும் கோபம்கொண்டு கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.

பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது. கலைஞர் உள்ளிட்டோர் அக்கட்சியில் முக்கிய பொறுப்பையும் ஏற்றார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவே திருமணம் செய்துகொண்டார். 23-9-1952 இல் “சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தை” முறைப்படி பதிவு செய்தார். இதன் பிறகு இயக்கத்திற்குப் போதிய அளவு சொத்துக்களைச் சேர்ந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தமிழகத்தில் பெரியாரின் இலட்சியங்களின் வளர்ச்சியாக இருந்து வருகிறது.

பெரியாரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல் இளைஞர்கள் பிரிந்து சென்றார்கள். பெரியார் அவர்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. கண்ணீர்த்துளிகள் என்று கண்டனம் செய்தார். கட்டுரைகள் எழுதினார்.

ஆனால் –

அண்ணா-பெரியார் நட்பு, கலைஞர்-பெரியார் நட்பு முறியவில்லை. முன் எப்போதையும்விட நெருக்கமாகவே அவர்கள் நட்பு வளர்ந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது,

“தி.மு.க ஆட்சியைப் பெரியாரிடம் காணிக்கையாக அளிக்கிறேன்” என்று அண்ணா அவர்கள் கூறினார்.

நட்பின் கடலாம் பெரியார், அண்ணாவிற்குத் தன் ஆதரவுக் கரம் நீட்டினார்.

குன்றக்குடியில் ஒரு சைவ மடம் உள்ளது. மடத்தின் தலைமைத் துறவி பொன்னம்பல அடிகளார் ஆவார். அவரை குன்றக்குடி மடாதிபதி என்று மக்கள் அழைப்பார்கள்.

குன்றக்குடி மடாதிபதி பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களிடம் இடையறா அன்புகொண்டிருந்தார்.

பெரியார் எல்லா மக்களும் இன்புற்று வாழவேண்டும் என ஆசைப்படுகிறார். மனிதர்களில் ஏற்றத்தாழ்வு கூடாது. சாதிச் சண்டைகள் ஒழிய வேண்டும். இக்கொள்கைகள் எல்லாம் நமக்கு என்றுரைப்பார் குன்றக்குடி அடிகளார்.

எனவே காவியும், கறுப்புச் சட்டையும் நட்பு கொண்டன. பெரியார் – அடிகளார் நட்பு வரலாற்றுச் சிறப்புடைய நட்பு. தமிழக மக்கள் இப்பெருமக்களின் நட்பால் பெற்ற பயன்கள் ஏராளம்….. ஏராளம்…….

எல்லா ஆறுகளும் கடலை நோக்கி ஓடிவருவது இயற்கை. கடலில் கலப்பதும் இயற்கை. அதுபோல பண்பாளர்கள் எல்லாரும் தந்தை பெரியாரின் கடல் போன்ற சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அந்தக் கடலை நோக்கி ஓடிவந்தார்கள். கடலுடன் சங்கமம் ஆனார்கள்.

இன்றைய அரசியல் உலகில் பெரியாரைப்போல் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது.


பண்பு நலன்கள்

பெரியார் ஒரு சிந்தனைச் சுரங்கம். சீர்திருத்தச் செம்மல். கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, எழுத்துச் சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என இப்படிப் பயனுள்ள சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார்.

“குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

என்ற இந்தத் திருக்குறள் பெரியாருக்கு மிகவும் பிடித்த குறள். இதன் பொருள்,

“தான் பிறந்த குடியை உயர்த்த நினைப்பார்க்கு நல்லகாலம் என்பது இல்லை.

காலத்தையும் பார்த்துச் சோம்பல்கொண்டு மானத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தால் பிறந்தகுடி அடியோடு கெட்டு அழியும்” என்பதாகும்.

பொதுநலத்தொண்டன் என்பவன் சுய கௌரவங்களைப் பார்க்கக்கூடாது. எனவே இந்தக் குறள் அவருக்குப் பிடித்த குறளாயிற்று. பெரியார் அவர்கள் இந்தப் குறளுக்கு இலக்கணமாகவே திகழ்ந்தார்.

பெரியாரின் அரிய சிந்தனையில் உதித்த சில திட்டங்களைப் பார்ப்போம்.

சாதிமுறை அடியோடு களையப்பட வேண்டும். கோயில்கள் கூடாது. பொதுவாக பிராத்தனை மண்டபங்கள் கட்டலாம்.

பெற்றோர்கள் பெண்களை 21 வயதுவரை நன்கு படிக்க வைக்க வேண்டும். அந்தப் பெண் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பிறக்கின்ற குழந்தைகளை அரசே ஏற்றுக்கொண்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

எல்லோரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும்.

அதிக மதிப்புள்ள தங்க நகைகளைப் பெண்கள் அணிவதை தடை செய்ய வேண்டும்.

அரசாங்க வேலை வாய்ப்புகிளல் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

கோயில் திருவிழாக்களை நிறுத்தி, சமூகவியல், அறிவியல், பொருளியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

பெரியாரின் புரட்சிக் கருத்துகள் அன்று பலருக்கு எரிச்சலை அளித்தது. ஆனால், இன்று அவரது சிந்தனைகள் படிப்படியாக செயல் வடிவம் பெற்று வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.

பெரியார் தான் கூறிய சீர்திருத்தக் கருத்துகளை மாநாடுகள் நடத்தி அதன்மூலம் வலியுறுத்தி வந்தார். புரட்சி, பகுத்தறிவு ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதி மக்கள் மனத்தில் பதிய வைத்தார்.

ஓய்வு இன்றி ஓயாது முழங்கிக்கொண்டிருக்கும் போராளி போல் பணியாற்றினார்.

பெரியார் அவர்கள் முதன் முதலாக சுயமரியாதை மாநாடு நடத்தினார்.

தொழிலாளர் மாநாடு, இளைஞர் மாநாடு, விவசாயிகள் மாநாடு, நாத்திகர் மாநாடு, மாணவர் மாநாடு, சமூக நீதிப் பாதுகாப்பு மாநாடு, இந்தி எதிர்ப்பு மாநாடு எனப் பல கோணங்களில் மக்களை அவர் அணுகினார்.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றப் பெரியார் குறள் மாநாடு நடத்தினார். இப்படிப் பல மாநாடுகள் மூலம் மற்போக்குக் கருத்துகளை மக்களிடையே எடுத்துக்கூறினார்.

‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று பெரியார் பாராட்டப் பெற்றார்.

பெரியார் என்றவுடன் அவரது கடவுள் மறுப்புக் கொள்கைதான் நினைவுக்கு வரும். அதே போல் பெரியார் என்றவுடன் நமக்கு அவரது சிக்கனமும் நினைவுக்கு வரும். வர வேண்டும்.

பெரியாரின் சிக்கனம்பற்றி சிக்கனமாக இல்லாமல் சற்று விரிவாகச் சிந்திப்போம்.

பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டே இருந்தார். பெரும்பாலும் தொடர்வண்டியில்தான் பயணம் செய்வார். பின்னாளில் தொண்டர்கள் நிதி வசூல் செய்து எல்லா வசதியும் கொண்ட சிற்றுந்து (Van) ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். இரயிலிலும், பேருந்திலும் பயணம் செல்லும்போது பெரியார் மிகுந்த சிக்கனத்தையே கடைபிடிப்பார். அப்பொழுதெல்லாம் தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பு என ஒன்று உண்டு. அதில் பயணம் செய்வர் கட்டணம் குறைவு. பெரியார் அவர்கள் அதில்தான் பயணம் செய்வார். பொதுப் பணத்தை செலவு செய்வதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

ஒரு முறை மதுரையில் பிரசாரம் செய்ய பெரியார் அவர்கள் ‘செங்கோட்டை பாஸஞ்சரில் தஞ்சையிலிலுந்து பயணம் மேற்கொண்டார். வண்டி திண்டுக்கல் வந்தது. திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி என்ற கிராமம் உள்ளது. சின்னாளப்பட்டி நெசவாளிகள் பெரியாரைப் பார்க்க திண்டுக்கல் இரயில் நிலையம் சென்றார்கள். பெரியாரை சந்தித்தார்கள். அப்போது ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்.

“ஐயா… மதுரையில் நாளைத்தான் கூட்டம். எங்கள் ஊர் மக்கள் தங்கள் சொற்பொழிவை கேட்க விரும்புகிறார்கள். தயவு செய்து எங்களுக்காக வாருங்கள். நாங்கள் இரவே, உங்களை மதுரையில் கொண்டு விட்டு விடுகிறோம்” என்பதுதான் அந்த வேண்டுகோள்.

பெரியார் அவர்களும் இசைவு தெரிவித்தார். அப்போது திண்டுக்கல் புகைவண்டி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் நாராயணன் என்பவர். அவர் பெரியாரை நிலையத்தில் சந்தித்தார். அவர் கவியரசு கண்ணதாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இலக்கிய ஈடுபாடுகொண்டவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர்.

“நீங்க… என்ன வேலை பார்க்கிறீங்க? “நான் இங்கே பார்சல் ஆபீஸ்ல கிளார்க்காக இருக்கிறேன்”.

அப்படியா… நல்லது. எங்க தோழர்கள் என்னை இங்கே இறங்கச் சொல்றாங்க. நாங்க.. மொத்தம் ஆறு பேர் மதுரைக்குப் போறோம். இப்போ திண்டுக்கல்ல இறங்கறோம். பயணம் செய்யாத தூரத்திற்கான பணத்தை திரும்பப் பெற முடியுமா என்று கேட்டார் பெரியார்.

“வாங்கலாம் ஐயா… ஆனால் அதுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுக்கனும். ஆனால் பணம்… திரும்பக் கிடைக்க மூணுமாசம்வரை ஆகும்.

“சரி… பரவாயில்லே… பணம் எவ்வளவு திரும்பக் கிடைக்கும்” என்று கேட்டார் பெரியார்.

இங்கிருந்து ஆறு பேருக்கான பயணத் தொகை 13 ரூபாய், அலுவலகச் செலவு 5 ரூபாய் ஆகும். அதுபோக 8 ரூபாய் கிடைக்கும் என்றார் நாராயணன்.

சரி…. அப்போ…. விண்ணப்பம் எப்படி எழுதணும்னு சொல்லுங்க. எழுதித் தர்றேன். எட்டு ரூபாய் மிச்சம் ஆகுதே. அதை கழக நிதியில் சேர்த்துடலாம்” என்று பெரியார் அமைதியாகச் சொன்னார்.

பொதுவாழ்வில்…. பணிபுரிபவர்கள் அனைவரும் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். பொதுப் பணத்தை தண்ணீராகச் செலவழிப்பவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். பெரியார் சிக்கனக்காரர் மட்டும் அல்ல. வரவு செலவுக் கணக்கு எழுதி வருபவர். ஐந்து பைசா என்றாலும் கணக்கு எழுதிவிடுவார் பெரியார்.

பயணத்தின்போது விலை குறைந்த உணவுப் பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிடுவார்.

உடைகள்பற்றிக் கவலை கொள்ளமாட்டார். முடிவெட்டுவதோ, முகம்மழிப்பதோ அவருக்கு பிடிக்காது. நேரமும், காசும் வீணாகும் என்பார். எப்பொழுதும் தாடிதான். வெற்றிலைப்பாக்கு பழக்கம் கூடக் கிடையாது. சோப்பு, பவுடர் தொடவேமாட்டார். குளிப்பது கூட வார்ம ஒருமுறைதான். தன் உடல் நலம் குறித்து அக்கறையே கொள்ளமாட்டார்.

கழகக் கூட்டங்கள்பற்றிய “வால்போஸ்ட்”களை விடுதலை அலுவலகத்திலேயே அச்சடிப்பார். வண்ணத்தில் போஸ்டர்கள் அடிக்க சம்மதிக்கமாட்டார்.

அலுவலகத்திற்கு வரும் பார்சல் கள்ளிப் பெட்டிகளைக் கொண்டே மேஜை, நாற்காலிகள் செய்யச் சொல்வார்.

அலுவலகத்திற்கு சுண்ணாம்பு அடிப்பதைக்கூட குறைந்த கூலியில் செய்து முடித்து விடுவார்.

எடைக்கு எடை பெரியாருக்குப் பரிசுகள் வழங்குவார்கள். அதையெல்லாம் அவர் கட்சி நிதியில் சேர்ந்து விடுவார். அவருக்கு அளிக்கப்படும் கறுப்புத் துணிகளைத் தொண்டர்களுக்கு கொடுத்து விடுவார்.

உணவுப் பொருளில் அது வேண்டாம். இது வேண்டாம் என்று எதையும் ஒதுக்கமாட்டார். பிரியாணி அவர் விரும்பிச் சாப்பிடுவார்.

அலுவலகத்திற்கு வரும் தபால் உறைகளை குப்பைத் தொட்டியில் போடமாட்டார். அலுவலகப் பையன்களைகொண்டு அவற்றை மீண்டும் பிரித்து ஒட்டி புதிய உரை தயார் செய்து விடுவார்.

இப்படி எல்லா வகையிலும் மிகவும் சிக்கனத்தை கடைப்பிடித்தவர் பெரியார். அதனால்தான் இன்று திராவிடர் கழகம் விழுதுகள் ஓடி மிகப் பெரிய ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது.

பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்…. என கல்விப் பணியில் கழகம் கடமை ஆற்ற முடிகிறது.

பின்தங்கிய மாணவர்களின் அறிவுக் கண்களை திறக்க பெரியாரின் சிக்கனமே உறுதுணையாயிற்று என்பதை நாம் உணரலாம்.

பெரியார் மிகுந்த கோபக்காரர். வாய்மையும், தூய்மையும் நமது இரு கண்கள் என போற்றினார். நேர்மையில்லாதவர்களைக் கண்டால் கடுமையாகக் கோபிப்பார். ஆனால், அதே சமயம் அடுத்தவர்களின் சுயமரியாதையை மிகவும் மதிப்பார்.

ஒருமுறை நாகர்கோயிலில் சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் பெரியார் அமர்ந்திருந்தார். அவர் அருகே இளைஞர் ஒருவரும் இருந்தார். அந்த இளைஞர் கால்மேல் கால் போட்டு, காலை ஆட்டிக்கொண்டேயிருந்தார். அந்த இளைஞனின் செயல்கண்டு தொண்டர்கள் கோபம் கொண்டார்கள். ஆனால், பெரியாரோ அதை பெரிதாகக் கருதவில்லை. கூட்டம் முடிந்தவுடன் தொண்டர்களில் சிலர் பெரியாரிடம் வந்தனர். அந்த இளைஞனின் மரியாதைக்குறைவான செய்கை குறித்து கோபமாகப் பேசினார்கள்.

பெரியார் கோபம் கொண்டவர்களை சாந்தப்படுத்தினார்.

நீங்கள் நினைப்பது தவறு. அது அவன் கால், அதை அவன் கால்மீது போட்டு காலை ஆட்டுகிறான். இதில் என்ன மரியாதைக் குறைவு கண்டீர்கள்? அவன் காலை என் கால்மீது போட்டு ஆட்டினால்தான் மரியாதைக் கூறைவு” என்று வெகு நிதானமாக விளக்கம் தந்தார். சுயமரியாதைச் சுடர் அவர். அவரது நாகரிகமான விளக்கம் கேட்டுத் தொண்டர்கள் வியந்து நின்றார்கள்.

அடுத்தவர்களின் சுயமரியாதையை அவர் மதித்தார். அதனால்தான் அவரோடு பழகியவன் கடைசிவரை நட்பு மாறாமல் பழக முடிந்தது.

பெரியார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். புகைவண்டிப் பயணத்தின்போது குட்டிக்கதைகள் சொல்லுவார்; புராணங்கள்பற்றிக் கிண்டல் செய்வார். சுவையான சம்பவங்களைக் கூறுவார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் நேரம் போவதே தெரியாமல் கேட்டு மகிழ்வார்கள்.

பொதுக்கூட்டம் வழக்கம்போல் கடவுள் மறுப்புப் பொதுக் கூட்டம். பெரியார் பேசுவதற்கு முன்பு இளைஞர்கள் யாரேனும் பேசுவது வழக்கம். அப்படி ஒரு கூட்டத்தில் தோழர் என்.வி. நடராசன் என்பவர் பேசினார். அப்பொழுது திடீரென கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன் மேடையில் கல்லை விட்டு எறிந்தார். மேலும் இரண்டொரு கல் வந்து விழுந்தது.

என்.வி. நடராசன் திகைத்தார். பெரியாரைத் திரும்பிப் பார்த்தார்.

“பயப்படாதே நடராஜா… நீ பேசு” என்றார் பெரியார்.

பெரியார் தந்த உற்சாகத்தில் நடராஜன் தொடர்ந்து பேசினார்; பேசினார் நீண்ட நேரம் பேசினார்.

கூட்டம் பொறுமை இழந்தது. ஆனால், தோழர் நடராஜனோ இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

உடனே பெரியார்,

“நடராஜா போதும் பேச்சை நிறுத்து. இனிமேலும் நீ பேசினால் நானே கல்லை விட்டு எறிவேன்” என்று கூறி கூட்டத்தினரை சிரிப்பில் ஆழ்த்தினார்.

சித்திரபுத்தன் என்ற பெயரில் ‘குடிஅரசு’ இதழில் நகைச்சுவை நடையில் பல செய்திகளைத் தருவார்.

“ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை” “வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்” என்று வித்தியாசமாகத் தலைப்புகளும் தருவார்.

பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்த பெரியார் தனது இறுதி மூச்சுவரை ஓயெவுன்றித் தொண்டாற்றினார்.

பெரியாரின் புரட்சிகரமான போராட்டங்கள் தொடர்ந்தன.

26-1-70 இல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்; 22-1-71இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு; 30-9-73இல் கறுப்புச் சட்டை மாநாடு; என தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு போராட்டங்களைப் பெரியார் நடத்தினார்.

18-11-72 முதல் 28-11-1973 வரை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். சாதி ஒழிப்புப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கா மதுரையில் மாபெரும் மாநாட்டைக் கூட்டினார். பெரியாரின் உடல்நிலையும் மோசமாகி வந்தது. ஆனால், பெரியார் அவர்கள் தனது நோய்பற்றியோ உடல் பலவீனம் ஆவது குறித்தோ கடுகளவும் அஞ்சவில்லை.

சென்னையில் 19-12-1973 இல் தியாகராஜா நகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பெரியார் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார். அடுத்த நாள் பெரியாரின் உடல் நலம் மிகவும் நலிவடைந்தது. உடனடியாக வேலூர் கிறித்தவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் தரவில்லை.

தந்தை பெரியார் 24-12-1973 காலை ஏழரை மணி அளவில் மறைந்தார். மானிட சமுதாயம் சமத்துவமாக வாழ-தன்னையே அர்ப்பணித்த அந்தப் பகுத்தறிவு பகலவன் மறைந்தது.

பகலவனுக்கு மறைவு உண்டா?

“சிவந்த மேனி, தடித்த உடல், பெருந்த தொந்தி, நல்ல உயரம், வெளுத்த தலைமயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்த மயிர் அடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கை வெள்ளச்சட்டை. சட்டைக்கு ‘மேல் ஐந்து முழப் போர்வை. காப்பி நிறக்கலர். கையில் எப்போதும் மொத்தமான தடி.

இவர்தான் பெரியார். தமிழரின் தலைவர் என்று பெரியாரை நம் மனக்கண்முன் படம் பிடித்துக்காட்டுவார் சாமி சிதம்பரனார்.

“வயதில் அறிவில் முதியோர் – நாட்டின்
வாய்மைப் போருக்கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!”

என்று பாடுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தந்தை பெரியார் -
பகுத்தறிவுப் பெட்டகம்
தந்தை பெரியார் -

மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்த சமூகச் சிந்தனையாளர்.

பெரியாரின் தத்துவங்களைப் பின்பற்றினால், சிறியார் எல்லாம் பெரியார் ஆவார்.

உலகச் சிந்தனையாளர்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார் பெரியார். அவரின் உன்னத சிந்தனைகள் மனித மனங்களை செழுமைப்படுத்தும்



அரசியல்

தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன


பொதுவுடமை

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”
“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”

என்றெல்லாம் முன்னோர்கள் மொழிவார்கள். கரைக்காய் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்றால் முதலில் விதை போட வேண்டும். விதை முளைத்து செடியாக வேண்டும். பிறகு அச்செடி படர்வதற்கு வகை செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும். செழிப்பாகக் காய்ப்பதற்கு எரு இட வேண்டும். பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

இப்டியெல்லாம் பாடுபட்டால்தான் சுரைக்காய் கிடைக்கும். அதனால்தான் “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது” என்றார்கள். அதாவது அனுபவம்தான் சிறந்த படிப்பு ஆகும்.

பெரியார் அவர்கள் காசிக்குச் சென்று திரும்பியதால் பல அனுபவங்களைப் பெற்றார். பசித்துன்பத்தை அனுபவித்திருக்கிறார் பல குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகியிருக்கிறார். கோவில்களிலும் மடங்களிலும் நடக்கும் முறைகேடுகளை நேரடியாகவே கண்டு மனம் வெதும்பியிருக்கிறார். காசு, பணத்தின் அருமையையும் உணர்ந்திருக்கிறார்.

அனுபவமே சிறந்த ஆசான். அதனைக் தன் பயணத்தின் போது அறந்தார் பெரியார். பணக்காரன் – ஏழை, உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் மக்களிதையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை அவர் அறிந்தார். சமூகச் சீர்திருத்தம்பற்றி அவரது உள்ளத்தில் சிந்தனைகள் தோன்றலாயிற்று.

காசியிலிருந்து மனச்சோர்வுடன்தான் ஊர் திரும்பியிருந்தார். மகனுக்குப் பொறுப்பு வரவேண்டும் என்று தந்தை விரும்பினார். உடனே அவர் தன் பெயரிலிருந்த நிறுவனத்தை பெரியார் பெயருக்கு மாற்றினார்.

“ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி” என்று பெயரிடப்பட்டது. பெரியார் பொறுப்பேற்று வணிகத்தை கவனித்து வந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்திஏழு.

வணிகத்தில் ஈடுபட்ட அதைசமயம் உடன் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பெரியாருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்களில் கிறிஸ்தவர், முஸ்லீம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தனர். எல்லோரிடமும் அன்பாய் பழகுவார். எல்லோரையும் சமமாக எண்ணுவார். அவர்கள் வீட்டில் நடைபெறும் விழாக்களில் தவறாது கலந்துகொள்வார்.

வியாபாரத்தில் யாருக்கேனும் சிக்கல் எழுந்தால் பெரியார் அதைத் தனது பேச்சுத்திறமையால் தீர்த்து வைப்பார். குடும்பத்தில் சொத்துத் தகராறுளைக்கூட தீர்த்து வைப்பார்.

எல்லாம் தெரிந்தவராக, எல்லோருக்கும் நல்லவராக பெரியார் திகழ்ந்தார்.

தொண்டு செய்வது பெரியாரின் இரத்தத்தில் ஊறிய பண்பாடு ஆயிற்று.

ஒருமுறை ஈரோடு நகரில் ‘பிளேக் நோய்’ பரவிற்று; பிளேக் ஒரு கொடுமையான தொற்றுநோய், அப்பொழுதெல்லாம் இன்றைக்கு இருப்பதுபோல் நவீன மருத்துவவசதி கிடையாது. ஊரில், ‘பிளேக் நோய்’ என்று கேள்விப்பட்டவுடன் பலர் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள்! அவ்வளவு பயம்.

ஆனால், பெரியார் துணிவுடன் பிளேக் நோயால் அவதிப்பட்ட நோயாளிகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தார். அவருடன் அவரது தோழர்களும் சென்று உதவினார்கள். ஏழைகளின் குடிசைகளுக்குச் சென்றார். அவர்களைக் காப்பாற்றிட கடும் பணியாற்றினார். நோய்க் கொடுமையால் பலர் இறந்து போனார்கள். அப்படி இறந்து போனவர்களை பெரியாரே இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார்.

வட இந்தியாவில் ‘பிளேக் நோய்’ தாக்கியபோது ஓடிச் சென்று உதவியவர் இரும்பு மனிதர் வல்லபாய்ப்படேல். அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு இரும்பு மனிதராய்த் தொண்டாற்றினார் தந்தை பெரியார்.

பெரியாரின் தொண்டு ஈரோடு முழுவதும் போற்றப்பட்டது. பல அரசு அதிகாரிகளும், அறஞர்களும் பெரியாரின் நண்பர் ஆனார்கள்.

தமிழறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர் பெரியாரின் பேச்சுத்திறனால் ஈர்க்கப்பட்டவர். பெரியாரின் நெருங்கிய நண்பர் ஆனார்.

புலவர் மருதையா பிள்ளை என்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர். அவரும பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தார்.

கைவல்ய சாமியார் பெரியாரின் நட்பு தமிழகமே அறியும்.

பெரியார் நேர்மையானவர். உண்னையானவர். அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவர். இக்காரணங்களால் ஈரோட்டு மக்கள் இவரிடம் மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.

ஊரில் உள்ள பல கோவில்களில் இவரது சேவையால் நிர்வாகம் ஒழுங்காக நடந்தப்பட்டது. அரசுக்கு சொந்தமான கோயில்களிலும் பெரியார் தொண்டாற்றியுள்ளார். கோயில் உற்சவங்களை பெரியாரே முன்நின்று நடத்தியுள்ளார்.

திருவிழாக்கள் வீண் செலவு என்ற கொள்கை உடையவர்தான் பெரியார் என்றாலும், பொறுப்பு ஏற்றுக்கொண்டதால் திருவிழாக்களையும் செவ்வனே செய்து முடித்தார்.

கோயல் திருப்பணிகளை அவரே ஏற்று செய்து முடித்துள்ளார். பழுதடைந்த கோயில்களை புதுப்பித்துள்ளார். பல கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திப் பெருமை சேர்த்துள்ளார். கோயில் சொத்துக்கள் கொள்ளை போகாமல் பாதுகாத்தார்.

கோயில்களில் நம்பிக்கை இல்லாதவர்தான் பெரியார். ஆனால், கொடுத்துள்ள பணியினைக் குறைவுபடாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கடைபிடித்தவர்.

“எப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாத காரியத்தை ஏற்றுக் கொண்டாலும் நாணயமாகவும் அதிக்க் கவனமாகவும் செய்து வருவேன்” என்று அவரே கூறுவார்.

கோயில் சொத்தைக் கொள்ளை கொள்ளவும் தம் நலனுக்குப் பயன்படுத்தவும் முன்வருவோர்தாம் ஏராளம். அப்படியின்றி கோயில் சொத்து கொள்ளை போகாமல் காத்தவர் பெரியார். ஆம் அவர்தான் பெரியார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட கடவுள் நம்பிக்கைக் கடுகளவும் இல்லாத பெரியார்தான் கோயில் காரியங்களைப் பழுது இன்றி செய்தார்.

பெரியார் தேவஸ்தான கமிட்டித் தலைவராக இருந்த போதுதான் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தைக் காட்டினார். பெரியார் தலைவராகப் பொறுப்பேற்றபோது தேவஸ்தானம் கடனில் மூழ்கித் தத்தளித்தது. அவர் தனது நேரிய நடவடிக்கைகளால் முதலில் கடனையெல்லாம் அடைத்தார். பிறகு பல ஆண்டுகள் அவரே தலைவராய் வீற்றிருந்தார். அவர் பதவி விலகும் போது சுமார் 45,000 ரூபாய்வரை சேமித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் அவரின் சேவை மனப்பான்மையை அறியலாம்.

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி” என்பது பெரியார் வாழ்வில் உண்மையாயிற்று.

ஈரோடு நகரவைப் பாதுகாப்புத் தலைவராகப் பெரியார் பணியாற்றியுள்ளார். அதே சமயம் சேலம் நகரவைத் தலைவராக ராஜாஜி அவர்கள் பணியாற்றினார்.

ஈரோடு நகராட்சியின் பணிகள் ராஜாஜியைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக சுத்தம், சுகாதாரம் ஈரோட்டில் சிறப்பாக இருந்தது.

“உங்கள் சுகாதார அதிகாரிகளை எங்கள் சேலம் நகருக்கு அனுப்பிவேயுங்கள். அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு எங்கள் நகரையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறோம்”. என்று ராஜாஜி அவர்களே வியந்து பாராட்டியுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1919 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் (Non-Co-Operation Movement) நடைபெற்றது. அப்பொழுது பெரியார் நகரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமல்ல, ஆங்கில அரயாங்கம் “ராவ்பகதூர்” பட்டம் வழங்க முன்வந்தது. அந்தப் பட்டத்தையும் அவர் பெற மறுத்துவிட்டார்.

பட்டங்களையும் பதவிகளையும் பாத தூசியாக பாவித்தவர் பெரியார். அவர்தான் பெரியார்; அவரே பெரியார்.

கௌரவ நீதிபதியாகவும், பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

பெரியார் ஈரோடு நகரவைத் தலைவராக இருந்தபோதுதான் ஈரோடு நகருக்கு காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் உழைப்பே அதற்குக் காரணம்.

சாலைகளை அகலப்படுத்தினார். போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தினார். ஊர் மக்கள் அனைவருமே பெரியாரைப் பெரிதும் பாராட்டினார்கள். சாலைகளை அகலப்படுத்துவதற்காக சாலை ஓரங்களில் இருந்த கடைகளை இடித்துத் தள்ளவேண்டிய நிலை.

கடைக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில் பலர் பெரியாரின் நண்பர்கள்; உறவினர்கள். பெரியார் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை.

“பசிநோக்கர்-கண் துஞ்சார்-எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளார்” என்ற செய்யுளுக்கு இலக்கணமாய் அவர் சேவை புரிந்தார்.

பெரியாரின் பரந்தமனம் போலவே சாலைகளும் அகலமாக்கப்பட்டன. பெரியார் அவர்களின் துணிச்சல், அஞ்சாமை பாராட்டப்பட்டன. பெரியார் அவர்கள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் என்றும் பாதிக்கப்பட்டதே கிடையாது. மனக்கட்டுப்பாடு உடையவர். அதனால்தான் அவரால் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்த முடிந்தது.

பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர் 1911இல் காலமானார். தந்தையாரின் விருப்பப்படி அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். அங்கே ஒரு சமாதியும் எழுப்பப்பட்டது.

பெரியாரின் தந்தையார் மிகச்சிறந்த கொடையாளி. அவர் வீட்டில் எப்போதும் விருந்து நடந்தவண்ணம் இருக்கும். இதனை நாம் முன்னரேப் பார்த்தோம். அதேபோல் அவர் மறைவுக்குப்பின் “டிரஸ்ட்” ஒன்று நிறுவப்பட்டது. அவரது சொத்துக்களில் பெரும் பங்கு அந்த டிரஸ்ட்டுக்கே எழுதி வைக்கப்பட்டது. பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், பெரியார் அவர்கள் தந்தையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. எனவே முழு சம்மதம் தந்தார். பொன் பொருளுக்கு ஆசைப்படாத பொன்னானவர் பெரியார்.

ராஜாஜி, பெரியார் நட்பும் இந்தக் காலத்தில் வளர்ந்தது.

காந்தியடிகளின் வேண்டுகோளின்படி 1920இல் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கை, தீண்டாமை ஒழிப்பு போன்ற கொள்கைகள் பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே காங்கிரஸ் கட்சியில் பெரியார் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் வெற்றி பெற தீவிரமாக பிரசாரம் செய்தார். காங்கிரஸின் முழுநேரத் தொண்டனாகவே தன்னை ஆக்கிக்கொண்டார். தான் வகித்து வந்த எல்லா பதவிகளையும் விட்டு விலகினார். அதுமட்டிமல்ல, நீண்டகாலமாக பெயர்பெற்று விளங்கி வந்த வணிக நிறுவனத்தை மூடிவிட்டார். பஞ்சாலை ஒன்று இருந்தது. அதையும் நிறுத்திவிட்டார்.

பெரியாரின் சிந்தனை…. செயல் எல்லாமே காங்கிரஸ்…. காங்கிரஸ் என்றாயிற்று. காங்கிரஸ் பேரியக்கக் கொள்கைகளுக்காக ஊர் ஊராக சென்று உற்சாகமாக்க் குரல் கொடுத்தார்.

பெரியார், ராஜாஜி, வ.உ.சி. போன்றோர்கள் காங்கிரஸில் இணைந்து ஒன்றாகப் பணியாற்றினார்கள். அந்த நேரத்தில் பெரியாரின் அரசியல்பணி இவ்வாறு தொடங்கியது


புரட்சி மொழிகள்

  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  • பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  • மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  • விதியை நம்பி மதியை இழக்காதே.
  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  • மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  • பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  • பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  • பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
  • எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்

நினைவுகள்

தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். 95 ஆண்டுகள் வாந்தார் என்றாலும், அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். அறியாமையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் எதிர்த்துப் போராடியவர். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியவர். எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும், மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சாமல், சமூக, பொது வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன.

அவரின்நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லம் நினைவு இல்லமாகவும், கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது


சிறப்பு பக்கங்கள்

கடந்த ஆயிரமாண்டில் வாழ்ந்த சமூகப் புரட்சியாளர்களில் எடுத்துக் காட்டாக விளங்கியவர் பெரியார் ஈரோடு வெங்கடநாய்க்கர் ராமசாமி அவர்கள் (1879-1973), ஜாதிமுறையை ஒழிக்கவும், பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடு அற்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் அச்சமின்றி. அயர்வின்றி அவர் எடுத்த ஈடுஇணையற்ற முயற்சிகள் வரலாற்றில் தனி இடம் பெறத்தக்கன. ஒத்துழையாமை இயக்கத்தின் போது பெரும் தியாகங்கள் பலவற்றைச் செய்த அவர் 1920-23 ஆண்டுகளில் ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டார். சமூகத்தின் சமத்துவம் வேண்டி நவீன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைதிப் போராட்டமான வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. 1925-இல் சுயமரியாதை இயக்கத்தையும், 1944-இல் திராவிடர் கழகத்தையும் தோற்றுவித்த அவர், மனித மாண்பு, பகுத்தறிவு, பாலியல்சமத்துவம, சமூக நீதி போன்ற கொள்கைகளைப் பரப்பினார். அவர் மேற்கொண்ட மக்கள் தழுவிய போராட்டத்தின் காரணமாகவே சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க 1951-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு முதன் முதலாகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எதனையும் முடிவெடுக்க அவர் தனது எழுத்துக்கள். பேச்சுகள் மூலம் மக்களுக்குக் கற்பித்தார். புத்துலகின் வருமுன் உரைப்பவர் அவர் என யுனெஸ்கோ நிறுவனம் மிகவும் பொருத்தமாக விவரித்துள்ளது. தனது சொத்துக்கள், மக்களின் நன்கொடைகள் எல்லாம் பொது அறக்கட்டளையாக்கி மக்களுக்கே தந்த வள்ளல் அவர்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக