திங்கள், 14 ஜூன், 2010

கறுப்பு ஜுலை 83

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதார ரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப் பட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு எதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப் போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலை பற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.

ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.

துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.

தொழிலாளர் தினம். (Labor Day )


ஆல்பர்ட்,
விஸ்கான்சின், அமெரிக்கா


உலகமெங்கும் "மே" மாதத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்... கனடாவில்... மட்டும் செப்டெம்பர் மாதத்தில்.... என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?! அவர்களுக்காக இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.....!

இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில் ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா", " என்னாச்சு... வீரப்பனோட லேட்டஸ்ட் நியூஸ் ஏதும் உண்டா " என்ற அலசல் நேரம் உட்பட) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த? பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப் படுத்தப்பட்ட ஒன்று.

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16 மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிற சலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.

அன்று...1863களில்...

அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச் சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசி நாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலை ஆரம்பமாகிவிடும்.

அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷுவுக்கு கொஞ்சம் பாலீஷ் போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..." என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷுபாலீஷ் வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ள நாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள் மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும்.

காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுகூட விடமுடியாது. ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டு அந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமான வயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதர சகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர் பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .

டிஸ்மிஸ்...

19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க் நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின் கனவு நொறுங்கித்தான் போனது.

ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில் நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர். இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்தது போல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வெளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடி தெருக்களில் வலம் வந்தனர்.

இவர்களுக்கு கிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்துவந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்று வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்கு ?இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.

தொழிற்சங்கம்...

பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்த மற்ற வேலைகளை விடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை குறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான். இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின் வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக் குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய் இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை.

தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலை முடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம் வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக் கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.

தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப் பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிற்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும் தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்க வேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக " பொது மக்களின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் " என்ற முத்திரை குத்தப்பட்டார்.

பீட்டர் பார்த்த வேலையும் சில விஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று படுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடு ஊர் ஊராக பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.

1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State ) உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில் ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.

எட்டு மணி நேர வேலை...

இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில் உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம் ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காங்கே தொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடு கூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும் இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.

1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கிய தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில், "எட்டுமணி நேர வேலை! எட்டுமணி நேரம் ஓய்வு! எட்டுமணி நேரம் பொழுதுபோக்கு!" (" LABOR CREATS ALL WEALTH " என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURS FOR REST, EIGHT HOURS FOR RECREATION !") என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களை வசீகரிக்கும் மந்திரச் சொல்லானது.

பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டு
மகிழ்ந்தனர். அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்த வெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால் என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்று ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம் கொண்டாடினர்.

1894 ல்.....

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது. 1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது.

இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகின்றனர். பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும் நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள்? இயக்க நடவடிக்கை களை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.

பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது வழக்கம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றிஈ?யங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள் விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?

தந்தை செல்வா


எதிர்வரும் 26 ம்திகதி(April 26) தந்தை செல்வா அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழீழ தாயக பிரதேசங்களில் எழுச்சியாக கொண்டாடப்படஇருக்கிறது.

இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார்.

பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.

1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட் டது. இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப் போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார்.

அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது "நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்


1.10.1928 ஆம் ஆண்டு பெற்றோர்கள் தந்தை சின்னையா மன்றாயருக்கும் அன்னை ராஜாமணி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் வி.சி. கணேசன் (எ) நடிகர் திலகம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன். இவர் பிறந்த சமயம் தந்தை சின்னையா மன்றாயர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் சிறை சென்றிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்பொழுது சிவாஜி அவாகள் நாலரை வயது சிறுவனாய் வளர்ந்திருந்தார்.

இவருக்கு ஏழு வயது நடக்கும்பொழுது தன் தந்தையுடன் கட்டபொம்மன் நாடகம் பாக்கச் சென்றார். நாடகம் நடத்துபவர்கள் வெள்ளைக்கார பட்டாளத்திற்கு ஆள் போதவில்லையென்று கணேசனை மேடையேற்றினர். அதுவே இவரின் முதல் நாடகம். ஆர்வமாய் நடித்தார். ஆனால் தந்தையாருக்கோ தான் எதிரியாக நினைக்கும் வெள்ளைக்காரர் படையில் மகன் நடித்து விட்டானே என்று கோபம். வீட்டிற்கு வந்ததும் என் எதிரியின் படையில் சேர்ந்து எப்படி கூத்தாடலாம் என்று அடித்தார். அன்றுதான் நாமும் ஏன் பெரிய நடிகனாக ஆகக் கூடாது என்ற வைராக்கியம் கணேசனின் மனதில் தோன்றியது. அந்த நேரத்தில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியான மதுரை ஸ்ரீபாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டிருக்க - தனது நடன, பாட்டு ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி தான் அனாதை என்று கூறி, அவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தி, நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.
அங்கு காலை ஏழு மணிக்கு எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு முதலில் பாட்டு இரண்டாவது டான்ஸ். அடுத்தது அன்று நடக்க வேண்டிய நாடகத்திற்கு வேண்டிய உரையாடல்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டும். இந்த முறைப்படியான பயிற்சி இவரை பெண் வேஷம் போடுவதிலிருந்து ஆண் வேஷம் அணிந்து நடிக்கும் 'ராஜபார்ட் நடிகர்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

இந்த காலகட்டத்தில் இவரின் மூத்த இரு அண்ணன்கள் அடுத்தடுத்து இறந்தனர்.இச செய்தி தெரிந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் கணேசன் இருந்தார்.

வி.சி.கணேசன் அவர்களுடன் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் போன்ற எல்லா ரோல்களிலும் நன்றாக நடிக்கக் கூடிய நடிகர்கள் இருந்தனர்.
நாடகக் கம்பெனி பரமக் குடியில் முகாமிட்டிருந்தபொழுது கர்ம வீரர் காமராஜரைச் சந்திக்கும் வாய்ப்பு கணேசன் அவர்களுக்கு கிட்டியது.

இவரின் நாடகக் குழு குமாரபாளையம் என்ற ஊரில் முகாமிட்டிருந்த பொழுது, மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது... கணேசன் உட்பட நாடகத்தில் நடிக்கும் பிள்ளைகளெல்லாம் - பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஆற்றில் வெள்ளம் வர - தண்ணீரிலிருந்து வெளியே ஓடி வர முடியாமல் கணேசன் உட்பட அனைவரும் தவித்துப் போனார்கள் அந்த ஊர் பெரியவர்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றினார்கள்.

இவர்களின் நாடகக்குழு கோயமுத்தூரில் முகாமிட்டிருந்த பொழுது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படம் எடுப்பதற்காக அங்கு ஒரு ஸ்டூடியோவில் தங்கியிருந்தார். அவர் லோகிதாசன் வேஷத்திற்கு ஒரு நடிகரைத் தேட, நாடகக் குழுவினர் கணேசனையும் காகா ராதாகிருஷ்ணனையும் அவரிடம் கொண்டு சென்று காட்டினர் அவர் அந்த வேஷத்திற்கு பொருத்தமானவர் என்று காகா ராதா கிருஷ்ணனை தேர்வு செய்தார். வீட்டிற்கு தெரியாமல் ஓடி வந்து நடிப்பின் ஆசையால் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தொடர்ந்து நடித்து பாராட்டுக்களைப் பெற்ற கணேசனுக்கு வீட்டின் நினைவு அதிகமாக வரத் தொடங்கியது. அதனால் "தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கணேசன் நாடகக் கம்பெனிகாரர்களிடம் தொந்தரவு செய்தார். அதனால் அவர்கள் கணேசனை தங்கவேலுடன் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். இருவரும் திருச்சி வந்து சேர்ந்தார்கள். திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்த கணேசன் முதலில் பாணத்தது அவரது தங்கை பத்மாவதியையும், தம்பி சண்முகத்தையும்... இரண்டு பேரும் பெரியவர்களாக வளர்ந்திருந்தார்கள். அந்த வருடம் அப்பா, அம்மா, அண்ணன் தங்கவேலு தம்பி சண்முகம் தங்கை பத்மாவதியுடன் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடினார்.

பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியிலிருந்து விலகி எம்.ஆர். ராதா 'சரசுவதி கான சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பிக்க - எம்.ஆர். ராதா அழைப்பின் பேரில் வி.சி. கணேசன் அந்த கம்பெனியில் சேர்ந்தார். கணேசனை சென்னைக்கு அழைத்து வந்த எம்.ஆர். ராதா அவரை சென்னையைச் சுற்றி பார்க்க வைத்தார்.

சரசுவதி கான சபாவினர் 'லட்சுமிகாந்தன்', 'விமலா'. 'விதவையின் கண்ணீர்' போன்ற புதிய நாடகங்களை நடத்தினார்கள். ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் தியேட்டரில்தான் இந்த நாடகங்கள் நடந்தன. அப்பொழுதுதான் தந்தை பெரியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கணேசனுக்குக் கிடைத்தது.

காலையில் எழுந்ததும் குளித்து விட்டு பெரியாரின் வீட்டிற்கு சென்று விடுவார் கணேசன். அங்குதான் பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் சினேகிதமும் பெரியாரின் மீது ஒரு ஈடுபாடும் கணேசனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஈரோட்டில் ஆரம்பத்தில் - வரவேற்பு பெற்ற எம்.ஆர். ராதா நாடகங்கள் பின்னர் வசூலில் குறைய ஆரம்பிக்க பார்ட்னாகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு நாடகம் நிறுத்தப்பட்டது. எம்.ஆர். ராதா மட்டும் கம்பெனியை விட்டு விலகி ஊருக்குச் சென்று விட்டார்.

நாடகம் தொடாந்து நடக்காததால் கணேசனுக்கும் அவருடன் தொடர்ந்து நடிக்கும் நாடக நடிகர்களுக்கும் சாப்பாட்டு பிரச்சனை ஏற்பட்டது. ஊரைச் சுற்றி உள்ள வயல்காட்டு தோட்டப் பகுதியில் விளைந்திருந்த சேனைக் கிழங்கை தோண்டி எடுத்து சாப்பிட்டு சமாளித்தவர்கள்- தாங்களே ஒரு நாடகம் நடத்தி அதில் மக்கள் கொடுத்த பணத்தை வைத்து திருச்சி போய் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு நாடகமே நடிக்காமல் வீட்டில் சும்மா இருந்த கணேசன் அவர்கள் திருச்சியில் 'ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்' என்ற கம்பெனியில் ஏழு ரூபாய் சம்பளத்தில் மெக்கானிக்காக வேலையில் சேர்ந்தார்.அவர் தன் அம்மாவிடம் கொடுத்த அந்த சம்பள பணம் குடும்பத்திற்கு அன்று பேருதவியாய் இருந்தது.

கணேசன் நாடகத்தில் நடிக்கவில்லையே தவிர கவனம் அதிலேயே இருந்தது. நண்பன் ஒருவன் அழைக்க அம்மாவின் அனுமதியுடன் மீண்டும் சரஸ்வதி கான சபாவில் போய் சேர்ந்தார்.

சரஸ்வதி கான சபா நாடக வசூல் குறையத் தொடங்க என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் முன் வந்து நாடகக் கம்பெனியை வாங்கி 'என்.எஸ்.கே. நாடகக் கம்பெனி' என்று பெயர் வைத்து 'ரத்னாவளி', 'மனோகரா' போன்ற நாடகங்களை நடத்தி வந்தனர். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறை செல்ல - அதன் பிறகு என்.எஸ்.கே. நாடகக் கம்பெனியை யார் நடத்துவது என்ற பிரச்னை எழுந்த போது கம்பெனியில் இருந்த எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி ஆகிய இரண்டு பெரிய நடிகாகளில் எஸ்.வி. சகஸ்ரநாமத்திடம் கம்பெனி பொறுப்பை டி.ஏ. மதுரம் ஒப்படைத்தார். இதனால் கே.ஆர். ராமசாமி ஒரு தனி நாடகக் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணேசன் - மற்றும் உடன் நடிக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார். அது திராவிடர் கழகம் மிக மும்முரமாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த காலம்.

1946 ஆம் ஆண்டு சென்னையில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடந்தது... அதில் பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. அதில் அண்ணா காசுபட்டராகவும். கணேசன் சிவாஜியாகவும் இணைந்து நடித்தனர். அந்த நாடகத்தைப் பார்த்த ஈ.வெ.ரா. பெரியார் "இந்த நாடகத்தில் யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜி வேஷத்தில் நடித்திருந்தானே அவன் யார்?" என்று கேட்டார். கணேசனை அவரெதிரில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

'நீதான் கணேசனா? இன்று முதல் நீ சிவாஜி' என்று ஈ.வெ.ரா பெரியார் பாராட்டி 'சிவாஜி' என்ற பட்டத்தை கணேசனுக்கு வழங்கினார். அன்று முதல் வெறும் கணேசன் 'சிவாஜி கணேசன்' ஆனார்.