திங்கள், 23 ஆகஸ்ட், 2010

காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு





பிறப்பு: 05-05-1818.



தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.
தாய்: ஹென்ரிட்டா.
பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.
மதம்: யூத மதம்.
சொந்த நாடு: பிரெஞ்சு.
பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.
உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.
தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.
பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.
கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)
கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.
கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.

காதல் வாழ்க்கை:

காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.
காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...
காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.
ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.
காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!
மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:

ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது .





ஜென்னியின் காதல்:

“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்....”

தொழில்:

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

திருமண வாழ்க்கை:

ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.
தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!
நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.
கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!

எல்லா மக்களும் என் மக்கள்!!

நானோர் உலக மகன்!!!”
சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.
மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.
பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.
பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.
மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும்


மலர் பூமியில் உதிர்ந்தது.
மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்................”.

விளாடிமிர் இலீச் லெனின்



விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин ஏப்ரல் 22 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப்புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம்என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது


வாழ்க்கைக் குறிப்பு

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தை இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தார். தாயார் மரியா உல்யானவ். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதரிகள். லெனினுடைய குடும்பம் கலப்பு இனத்தன்மை கொண்டது. இவரது மூதாதையர்கள் ரஷ்யர், மோர்டோவியர், கல்மியர், யூதர், வொல்கானிய ஜேர்மானியர், சுவீடியர் எனப் பலவிதமான இனப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என இவரது வரலாற்றை எழுதியவரான டிமிட்ரி வொல்க்கோகோனோவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார். சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார். 1886 ஆம் ஆண்டு ஜனவரியில் மூளையில் ஏற்பட்ட நோயினால் லெனினின் தந்தையார் இறந்தார். 1887 மே மாதத்தில் லெனினுக்குப் 17 வயதாக இருக்கும்போது, ரஷ்யாவின் ஜார் மன்னனைக் கொல்வதற்கான சதிமுயற்சியில் பங்கு கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலெக்சாண்டர் கைதானபோது அவருடன் இருந்த சகோதரி கிசானிலிருந்து 40 கிமீ தொலைவிலிருந்த கொக்குஷ்கினோ என்னும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகள் லெனினைத் தீவிரவாதி ஆக்கின. இவரது வரலாறுகள், லெனினது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த தீவிரவாதப் போக்குக்கு இதையே அடிப்படையாகக் கூறுகின்றன. பிற்காலத்தில் கோடிக்கணக்கான ரஷ்யப் பாடநூல்களில் இடம்பெற்ற, நாங்கள் வேறு பாதையைப் பின்பற்றுவோம் என்னும் தலைப்பிட்டு, பியோட்டர் பெலூசோவ் என்னும் ஓவியர் வரைந்த புகழ் பெற்ற ஓவியத்தில் லெனினும் அவரது தாயாரும் அலெக்சாண்டரின் இழப்புக்காகத் துயரப்படுவது காட்டப்பட்டுள்ளது. அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.


அரசியல் ஈடுபாடு

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட லெனினும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டார். இதனால் லெனின் பின்னர் கைது செய்யப்பட்டார். இவரது அரசியல் கருத்துக்களுக்காக இவர் பல்கலைக் கழ்கத்திலிருந்தும் விலக்கப்பட்டார். எனினும் படிப்பை அவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார். ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்ட லெனின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். லெனினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே சட்டம்பயின்ற அவர் 1891 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். 1892 ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறிப் பட்டம் பெற்றார். இவர் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்ததோடு, ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றையும் ஓரளவு கற்றிருந்தார். எனினும் பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது பயிற்சி குறைவாகவே இருந்தது. அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது

கொண்டவர்லெ கொபூசியே



சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர்லெ கொபூசியே (அக்டோபர் 6, 1887 – ஆகஸ்ட் 27, 1965) என்னும் பெயராலேயே பரவலாக அறியப்பட்டார். பிரான்ஸ் சுவிசில் பிறந்த இவர் ஒரு கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று,நவீனத்துவம், அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார்.


நவீன வடிவமைப்புத் தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளுக்கான முன்னோடியாகக் கருதப்படுகின்ற இவர், நெருக்கடியான நகரங்களில் வாழ்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை நிலையை வழங்கும் முயற்சியில் உழைத்தார். 50 ஆண்டுகள் கட்டிடக்கலையில் தொழில் புரிந்த இவர் வடிவமைத்த கட்டிடங்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. மத்திய ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இவர் வடிவமைத்த கட்டிடங்கள் உள்ளன. இவர் ஒரு கட்டிடக்கலைஞர் மட்டுமன்றி, ஒரு நகரத் திட்டமிடலாளர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர் மற்றும் நவீன தளபாட வடிவமைப்பாளரும் ஆவார்.
வாழ்க்கை

தொடக்க காலமும் கல்வியும், 1887 - 1913

இவர் வட மேற்குச் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரா மலைப் பகுதியில் அமைந்த நியூச்சாட்டல் கன்டனில் இருக்கும்லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் என்னும் சிறிய நகரம் ஒன்றில் பிறந்தார். இந் நகரம் பிரான்சுடனான எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காட்சிக் கலைகளின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் கலைப் பள்ளியில் பயின்றார். இங்கே இவரது கட்டிடக்கலை ஆசிரியர் ரேனே சப்பலாஸ் என்பவராவார். லெ கொபூசியேயின் தொடக்ககால வீட்டு வடிவமைப்புக்களில் இவரது செல்வாக்கு அதிகம் காணப்பட்டது.
இளமைக் காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். 11907 ஆஅம் ஆண்டளவில் பாரிசுக்குச் சென்ற இவர் வலிதாக்கப்பட்ட காங்கிறீற்றைப் பயன்படுத்துவதில் பிரான்சில் முன்னோடியாக விளங்கிய அகஸ்ட்டே பெரெட் என்னும் கட்டிடக்கலைஞரின் அலுவலகத்தில் பணிக்கு அமர்ந்தார். அக்டோபர் 1910 க்கும் மார்ச் 1911 க்கும் இடையில் பீட்டர் பெஹ்ரென்ஸ் என்னும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் ஒருவருக்காக பெர்லின்நகருக்கு அண்மையில் ஓரிடத்தில் பணி புரிந்தார். இங்கே அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களில் இருவரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, வால்ட்டர் குரொப்பியஸ் ஆகியோரைச் சந்தித்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக் காலத்தில் இவர் ஜெர்மன் மொழியையும் கற்றுக்கொண்டார். இளமையில் இவ்விரு பணியிடங்களிலும் கிடைத்த பட்டறிவு இவரது பிற்கால வடிவமைப்புக்களில் செல்வாக்குச் செலுத்தியது.
1915 ஆம் ஆண்டில் இவர் பால்கன் நாடுகளில் பயணம் மேற்கொண்டார். கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் சென்ற அவர் அங்கே அவர் கண்டவற்றை வரைபடங்களாக வரைந்து கொண்டார். இவற்றுள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த கட்டிடமான பார்த்தினனைப் பார்த்து வரைந்த வரைபடங்களும் அடங்கும்.

தொடக்ககாலப் பணிகள்: வீடுகள்

முதலாவது உலகப் போர்க் காலத்தில் இவர் தான் தொடக்கத்தில் கல்வி பயின்ற லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் கலைப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். போர் முடியும் வரை இவர் பாரிசுக்குச் செல்லவில்லை. இவ்வாறு சுவிட்சர்லாந்தில் இருந்த நான்கு ஆண்டுக் காலத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டிடக்கலைக் கோட்பாட்டு ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்தார். "டொம்-இனோ" வீடு எனப்படும் திட்டமும் இவற்றுள் ஒன்றாகும். இக் கட்டிடத்துக்காக இவர் வடிவமைத்த மாதிரி; காங்கிறீட்டுத் தளங்களையும், விளிம்புப் பகுதிகளில் அவற்றைத் தாங்கும்படி அமைக்கப்பட்ட குறைந்த அளாவிலான மெல்லிய வலிதாக்கப்பட்ட காங்கிறீட்டுத்தூண்களையும், ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குச் செல்வதற்கான காங்கிறீட்டாலான படிக்கட்டுஅமைப்பையும் கொண்ட திறந்த தள அமைப்பையும் கொண்டு அமைந்திருந்தது. இந்த மாதிரி அமைப்பே பின் வந்த பத்து ஆண்டுகளில் இவர் வடிவமைத்த கட்டிடங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. விரைவிலேயே தனது ஒன்று விட்ட சகோதரரான பியரே ஜெனெரெட் என்பவருடன் சேர்ந்து சொந்தத் தொழில் தொடங்கினார். இக் கூட்டுத் தொழில் 1940 ஆம் ஆண்டு வரை நீடித்தது.
1918 ஆம் ஆண்டில், முன்னர் கியூபிச ஓவியராக இருந்து பின்னர் அதன்மேல் வெறுப்புக் கொண்ட அமெடீ ஒசன்பன்ட் (Amédée Ozenfant) என்பவரைச் சந்தித்தார். லெ கொபூசியேயை ஓவியம் வரையுமாறு ஒசன்பன்ட் ஊக்குவித்தார். இருவரும் இத் துறையில் கூட்டாக இயங்க முடிவு செய்தனர். கியூபிசம், பகுத்தறிவுக்கு ஒவ்வாதது எனவும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் கூறிய இவர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கியூபிசத்துக்கு மாற்றாக தூய்மையியக் (Purism) கலை இயக்கம் ஒன்றைத் தொடங்கினர். இந்த இயக்கத்துக்கான இதழ் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆயினும் இவர் கியூபிச ஓவியரான பெர்னண்ட் லெகர் (Fernand Léger) என்பவருக்கு நல்ல நண்பராகவும் விளங்கினார்.
புனைபெயர்


பத்து சுவிஸ் பிராங்குகள் நாணயத் தாளில் லெ கொபூசியேயின் உருவப்படம்

இவர்கள் வெளியிட்ட இதழின் முதல் வெளியீட்டில் கொபூசியே தனது தாய்வழிப் பாட்டனின் பெயரைச் சிறிது மாற்றி லெ கொபூசியே என்னும் புனைபெயரில் எழுதினார். அக் காலத்தில், சிறப்பாக பாரிசில், பல துறைக் கலைஞர்கள் தங்களை ஒற்றைப் பெயரினால் அடையாளப் படுத்திக் கொள்ளும் போக்குக் காணப்பட்டது.
1918 க்கும் 1922 க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் ஒரு கட்டிடம்கூடக் கட்டவில்லை. தனது தூய்மையியக் கோட்பாட்டை வளர்ப்பதிலும், ஓவியம் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். 1922 ஆம் ஆண்டில் லே கொபூசியேயும், ஜீனரெட்டும் பாரிசில் கலைக்கூடம் ஒன்றைத் தொடங்கினர்.
இவருடைய கோட்பாட்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பல தனியார் வீடுகளை இவர் வடிவமைத்தார். இவற்றுள் பிரெஞ்சுத் தானுந்துத் தயாரிப்பாளர் ஒருவருக்காக வடிவமைத்த "சிட்ரோகான்" மாளிகையும் ஒன்று. இவ்வீட்டின் அமைப்பில் பல நவீன தொழில்நுட்ப முறைகளையும், கட்டிடப்பொருட்களையும் லே கொபூசியே பயன்படுத்தினார். இம் மாளிகை மூன்று மாடிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் வசிக்கும் அறை இரட்டை உயரம் கொண்டதாக இருந்தது.படுக்கையறைகள் இரண்டாம் மாடியிலும், அடுக்களை மூன்றாம் மாடியிலும் அமைக்கப்பட்டன. கூரை வெய்யில் காய்வதற்கான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. கட்டிடத்துக்கு வெளிப்புறத்தில் நிலத் தளத்திலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இக்காலத்தைச் சேர்ந்த பிற கட்டிடங்களில் இருந்ததைப் போலவே இக் கட்டிடத்திலும், இடையீடற்ற தொடர்ச்சியான பெரிய பலசாளரங்களை லே கொபூசியே வடிவமைத்திருந்தார். இதன் தளம் செவ்வக வடிவானது. வெளிப்புறச் சுவரின் சாளரங்கள் இல்லாத பகுதி வெறுமனே சாந்து பூசி வெண்ணிறம் தீட்டப்பட்டது. லெ கொபூசியேயும் ஜீனரெட்டும் இக் கட்டிடத்தின் உட் புறத்தை அதிகம் அலங்காரம் செய்யாமல் வெறுமையாகவே விட்டிருந்தனர். தளவாடங்கள் பெரும்பாலும் எளிமையானவையாக உலோகக் குழாய்களினால் ஆனவையாகவும், மின்விளக்குகள் அலங்காரம் இன்றி வெறும் குமிழ்களாகவுமே இருந்தன. உட்புறச் சுவர்களும் வெண்ணிறமாகவே விடப்பட்டன. 1922 ஆம் ஆண்டுக்கும் 1927 ஆம் ஆண்டுக்கும் இடையில் லெ கொபூசியேயும் ஜீன்னரெட்டும் பாரிசுப் பகுதியில் இருந்த பலருக்கு வீடுகளை வடிவமைத்துக் கொடுத்தனர்.

நகரிய ஈடுபாடு


இந்தியாவின் சண்டிகாரிலுள்ள உயர் நீதிமன்றக் கட்டிடம்
பல ஆண்டுகளாகவே பாரிசின் அதிகாரிகள் நகரின் பெருகி வந்த அழுக்கடைந்த சேரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றும் முடியாதவர்களாக இருந்தனர். இவ்வாறான நகர்ப்புற வீடமைப்புத் தொடர்பான நெருக்கடி நிலையில் பெருமளவு மக்களைக் குடியமர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் லெ கொபூசியே ஆர்வம் கொண்டார். நவீன கட்டிடக்கலை வடிவங்கள் வருமானம் குறைந்த பகுதியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அமைப்பு அடிப்படையிலான தீர்வுகளைக் கொடுக்கும் என அவர் நம்பினார். அவருடைய "இம்மெயுபிள்சு வில்லாக்கள்" எனப்படும் திட்டம் இந் நோக்கத்தைக் கொண்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் வசிக்கும் அறைகள்,படுக்கையறைகள், அடுக்களைகள் ஆகியவற்றைக் கொண்ட வீட்டு அலகுகள் ஒன்றொன்மீது ஒன்று அடுக்கிய வடிவில் அமைந்த பல பெரிய கட்டிடங்களை உள்ளடக்கியிருந்தது.
இவ்வாறான அடுக்கு மாடி வீடுகளை வடிவமைப்பதுடன் மட்டும் திருப்தியடையாமல் முழு நகர்களின் வடிவமைப்புக் குறித்தும் லெ கொபூசியே ஆய்வுகளில் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டில் "சமகால நகரம்" (Contemporary City) என அழைக்கப்பட்ட, ஒரு மில்லியன் மக்கள் வசிக்கத்தக்க நகரத்துக்கான திட்டம் ஒன்றை இவர் வெளியிட்டார். இதன் முக்கிய பகுதி சிலுவை வடிவில் அமைந்த 60 மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள், உருக்கினாலான சட்டக அமைப்பைக் கொண்டு கண்ணாடி போர்த்தப்பட்ட அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும். இவ் வானளாவிகள் செவ்வக வடிவான பெரிய பூங்கா போன்ற அமைப்பைக் கொண்ட பசுமையான பகுதியில் அமைந்திருந்தன. இவற்றின் நடுவே மிகப் பெரிய போக்குவரத்து மையம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பல தளங்களைக் கொண்டதாக அமைந்திருந்த இந்த மையத்தில் பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், நெடுஞ்சாலைச் சந்திப்புகள், மேல் தளத்தில் ஒருவானூர்தி நிலையம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வணிக அடிப்படையில் இயங்கக்கூடிய வானூர்திகள் மிகப்பெரிய வானளாவிகளுக்கு இடையில் இருக்கும் இடங்களில் வந்து இறங்க முடியும் என்று அவர் நம்பினார். லெ கொபூசியே நடைபாதைகளை, வண்டிகளுக்கான சாலைகளில் இருந்து வேறுபடுத்தித் தனித்தனியாக அமைத்ததுடன், தானுந்துகளே முக்கிய போக்குவரத்துச் சாதனங்களாக இருக்கும் எனவும் கருதினார். மையப் பகுதியில் உள்ள வானளாவிகளில் இருந்து வெளிப்புறமாகச் செல்லும்போது, சிறிய குறைவான உயரம் கொண்ட வதிவிடக் கட்டிடங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. பிரான்சியத் தொழில் முனைவோர், அமெரிக்கத் தொழில் துறை மாதிரிகளைப் பின்பற்றி சமூகத்தை மீளமைப்பதில் முன்னணியில் இருப்பார்கள் என லெ கொபூசியே நம்பினார். நோர்மா எவென்சன் என்பவர் கூறியதைப் போல முன்வைக்கப்பட்ட இந்த நகரத் திட்டம் சிலரைப் பொறுத்தவரை புதிய உலகத்தை உருவாக்குவதற்கான துணிச்சலான நோக்கு ஆனால், வேறுசிலர் இதனைப் பழக்கமான நகரச் சூழலை மறுக்கின்ற, தன்னைத்தானே பெருமை பீற்றிக்கொள்ளும் அளவு கொண்ட ஒரு திட்டமாகப் பார்த்தனர்.
எல்லா சமூக பொருளாதார மட்டங்களிலும் உயர்வான வாழ்க்கைத் தரத்தோடு கூடிய மிகுந்த செயற்றிறன் மிக்க சூழலாக சமூகத்தை மாற்றுவதற்காக நவீன தொழில் துறை நுட்பங்களையும், வழிமுறைகளையும் கைக்கொள்ள வேண்டும் என வாதிடும் ஆய்வுச் சஞ்சிகை ஒன்றிலும் லெ கொபூசியே எழுதிவந்தார். சமூகத்தை வேறு வகைகளில் உலுக்கக்கூடிய புரட்சிகள் உருவாகமல் தவிர்ப்பதற்கு இத்தகைய மாற்றங்கள் அவசியம் என அவர் உறுதியாக வாதிட்டார். "கட்டிடக்கலை அல்லது புரட்சி" என்னும் அவரது கருத்து இவ்வாய்வு இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் மூலமே உருவானது. அத்துடன், 1920க்கும் 1923க்கும் இடையில் இச் சஞ்சிகையில் கொபூசியே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான " ஒரு கட்டிடக்கலையை நோக்கி" என்னும் நூலின் மையக் கருத்தும் இதுவே.

கோட்பாட்டு அடிப்படையிலான நகர்ப்புறத் திட்டங்களில் லெ கொபூசியே தொரர்ந்து ஈடுபட்டார். இன்னொரு தானுந்துத் தயாரிப்பாளர் ஒருவருடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட "பிளான் வொயிசின்" என்னும் திட்டத்தை 1935 ஆம் ஆண்டில் அவர் காட்சிக்கு வைத்தார். இத்திட்டத்தில், செயினுக்கு வடக்குப் புறம் இருந்த பாரிசின் மையப்பகுதியின் பெரும்பகுதியை இடித்துவிட்டு அதற்குப் பதிலாக "சமகால நகர"த் திட்டத்தில் அவர் முன்மொழிந்த சிலுவை வடிவிலான 60 மாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு முன்மொழிந்தார். இக் கட்டிடங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டும் சாலை வலையமைப்பையும், பூங்காக்களையொத்த பசுமைப் பகுதிகளுக்கும் நடுவில் வடிவமைக்கப்பட்டிருந்தன. லெ கொபூசியேயின் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தடெயிலரியம், ஃபோர்டியம் ஆகியவை தொடர்பான எண்ணத்துக்கு, ஆதரவானவர்களாக இருந்தபோதும், பிரான்சியத் தொழில்துறையினரும், அரசியலாளர்களும் அத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தனர். எப்படியாயினும், பாரிசு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த நெருக்கடி, அழுக்குப் போன்றவற்றைக் கையாள்வது தொடர்பிலான கலந்துரையாடல்களை இத்திட்டம் தோற்றுவித்தது.

இறப்பு

1965 ஆம் ஆண்டு ஆகசுட்டு 27 ஆம் தேதி, 77 வயதான லெ கொபூசியே அவரது மருத்துவர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு பிரான்சிலுள்ள ரோக்கேபுரூன்-கப்-மார்ட்டின் என்னும் இடத்துக்கு அருகில்நடுநிலக்கடல் பகுதியில் நீந்தச் சென்றார். அதுவே அவரது வாழ்வின் இறுதியாக முடிந்தது. இவரது உடல் கடலில் குளித்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்மாரடைப்பினால் இறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது இறுதிக் கிரியைகள் லூவர் மாளிகை முற்றத்தில் 1965 செப்டெம்பர் முதலாம் தேதியன்று இடம்பெற்றன. அப்போது பிரான்சின் கலாச்சார அமைச்சராக இருந்த, எழுத்தாளரும் சிந்தனையாளருமான அண்ட்ரே மல்ருக்சின் இந் நிகழ்வுகளை வழிநடத்தினார்.
இவரது இறப்பு பண்பாட்டு மற்றும் அரசியல் உலகில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது மிகப்பெரிய கலை எதிரிகளுள் ஒருவரான சல்வடோர் டாலி உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இவரது இறப்பையிட்டு வருத்தம் தெரிவித்தனர். அமெரிக்க சனாதிபதி லின்டன் பி. ஜான்சன், லெ கொபூசியேயினது செல்வாக்கு உலகம் தழுவியது என்றும், இவரது வேலைகள் உலக வரலாற்றில் ஒரு சில கலைஞர்களால் மட்டுமே அடைய முடிந்த தரம் கொண்டவையாக இருந்தன என்றும் புகழ்ந்தார். நவீன கட்டிடக்கலையின் மிகப் பெரிய சாதனையாளரை உலகம் இழந்துவிட்டதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது


லெ கொபூசியேயின் கட்டிடங்கள்

வில்லா சவோய்
யுனைட் டி'ஹபிட்டேஷன்
வில்லா சவோய்
ரொஞ்சாம்ப் சிற்றாலயம்
இந்தியாவின் சண்டிகாரில் அமைந்துள்ள கட்டிடங்கள்:
நீதி மாளிகை
கலைக்கூடமும் அருங்காட்சியகமும்
செயலகக் கட்டிடம்
ஆளுனர் மாளிகை
அரச கலைக்கல்லூரியும், சண்டிகார் கட்டிடக்கலைக் கல்லூரியும்
அகமதாபாத் அருங்காட்சியகம், அகமதாபாத், இந்தியா
சதாம் உசேன் உடற்பயிற்சிக் கூடம், பாக்தாத், ஈராக்
தேசிய மேற்கத்திய கலை அருங்காட்சியகம், டோக்கியோ, சப்பான்

முதல் ஆம்புலன்ஸ் வண்டி



நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்

நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!
பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...
அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...
ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...
அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...
நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்