வெள்ளி, 6 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலா...

இனி எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்நூற்றாண்டின் 2013ஆவது ஆண்டை காலம் சபித்துக்கொண்டே இருக்கும். காரணம் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர், விடுதலைத் தீரத்தோடு தன் மக்களை மீட்டெடுத்த மாமனிதர் நெல்சன் மண்டேலா இயற்கை எய்திய ஆண்டு என்பதால்.
 
இன்னும் சில நாட்கள் பொறுத் திருந்தால் சரித்திரம் சபிக்கும் பழிச்சொல்லிலிருந்து 2013ஆம் ஆண்டு தப்பித்திருக்கும் ஆம்... நாம் இப்படி விவரிப்பது சரியானதாகவே இருக்கும் என்று நம்புகிறோம்!
 
நெல்சன் மண்டேலா... இவருக்கு வயது 95. தென்னாபிரிக்காவின் சரித்திர பக்கங்கள் மட்டுமல்ல உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்துத் தேடினாலும் இவரைப் போல் இன்னொருவரை காண முடியாது.
 
இவர் ஒருவர் தான் இவர் மட்டும்தான் என்று மற்றுமொரு புரட்சித் தலைவரான பிடல் கஸ்ட்ரோ குறிப்பிட்டிருந்தார். அதன்படி நெல்சன் மண்டேலா தரித்து நின்று தரிசிக்க வேண்டிய ஒருவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக தன்னை அவ்வப்போது மாற்றிக் கொண்டாலும் விடு தலை விடுதலை என்றே அவரின் மூச்சுக்காற்று உச் சரித்துக்கொண்டிருந்தது.
தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காட்டி அப்போதைய ஆட்சியாளர்கள் நெல்சன் மண்டேலாவை சிறையில் அடைத்தார்கள். ஒரு நாட்டின் தலைவர் இறந்துவிட்டால் அந்நாட்டு மக்கள் கண்ணீர் வடிப்பர். ஏன் அந்நாட்டின் ஆதரவு நாடுகள் இரங்கல் தெரிவித்து தம் பங்கிற்கு ஒரு மலர் கொத்தை அனுப்பி வைக்கும். ஆனால் நெல்சன் மண்டேலாவின் உயிர் பிரிந்த செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த உலகமே அழுகிறதென்றால் அது நெல்சன் மண்டேலாவிற்கு மட்டுமே என்பதை சரித்திரம் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
 
தன்நாட்டு மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் நேசித்த ஒரே மனிதர். உலக மக்கள் அனைவரும் நேசித்த ஒரே மனிதர் என்றால் அது மண்டேலா மட்டும்தான்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி நெல்சன் மண்டேலா எனும் சிறைப்பறவையின் உயிர் கூடுவிட்டுப் பிரிந்த துயரச் செய்தி உலகெல்லாம் வேகமாகப் பரவியது. செய்தியை மட்டும் பரப்பவில்லை செய்தியோடு சேர்த்து கண்ணீரையும் பரப்பிவிட்டுத்தான் ஓய்ந்தது.
 
தலைவன் என்றால் இப்படி இருக்கவேண்டும். மனிதன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கைநீட்டி காட்ட மனித குலத்தில் பிறந்த விடுதலை வீரனை இயற்கை தன்னோடு அழைத்துக்கொண்டதில் உலகத்திற்கே பேரிழப்பு.
 
இழப்பு இழப்பு என்று எதையெதையோ எத்தனை எத்தனை பேர்களையோ நாம் அடையாளம் காட்டுகின்றோம். உண்மையில் பேரிழப்பு என்றால் அது நெல்சன் மண்டேலாதான்.
 
1918ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அழவிட்டுச் சென்றுள்ள நெல்சன் மண்டேலா.
 
இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. இவரது தந்தை சோசா எனப்படும் தென்னாபிரிக்க பழங்குடி மக்களின் தலைவர். ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார். சிறு வயதில் இவர் ஒரு குத்துச் சண்டை வீரராக அடையாளம் காணப்பட்டார்.
1941ஆம் ஆண்டு ஜொகன்னஸ்பேர்க் சென்று பகுதி நேர படிப்பாக சட்டககல்வி கற்றார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியும், ஒரு எஸ்டேட் தரகராகவும் வேலைப் பார்த்தவர்தான் மண்டேலா.
 
மண்டேலா பற்றி மட்டுமே சொன்னால் போதுமா அவர் எப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் தம் மக்களை விடுவிக்கும் தீரத்தோடு போராடினார் என்பதற்கு அக்கால நிலவரத்தைச் சொன்னால்தானே பொருந்தும்.
 
தென்னாபிரிக்காவின் வரலாற்றைப் பார்த்தால் தொன்று தொட்டே கறுப்பர்கள்தான் தென்னாபிரிக்க மண்ணுக்கு சொந்தக்காரர்கள். கறுப்பர்கள் என்று அடையாளப்படுத்துவதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தென்னாபிரிக்காவில் பிரச்சினை வெடிக்க காரணமே இந்த நிறவெறிதான். அதை கறுப்பு, வெள்ளையர்கள் என்று சொன்னால் புரிந்துகொள்ள இலகுவாகும் என்பதனால் அப்படியே சொல்லாடலைப் பயன்படுத்துகின்றோம்.
 
17ஆம் நுற்றாண்டளவில் அங்கு வந்து குடியேறினார்கள் வெள்ளையர்கள். வெள் ளையர்கள் என்றால் பிரஞ்சுக் காரர்களும் டச்சு நாட்டவர்களும் ஆங்கிலேயர்களும். இவர்களை வரவேற்று விருந்தினர்களாக நடத்தத் தொடங்கினார்கள் தென்னாபிரிக்க மண்ணின் மைந்தர்கள். அங்குதான் பிரச்சினையே ஆரம்பமானது.
 
இப்படி விருந்தினர்களாக உள்ளே வந்த வெள்ளையர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் வெள்ளையர்கள். கைப்பற்றிய அதிகாரத்தை வைத்து அந்நாட்டு மக்களான கறுப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த தொடங்கினர். விருந்தினார்களாக நாட்டிற்குள் வந்த வெள்ளையர்கள் அந்நாட்டில் 80 சதவீதமாக இருந்த கறுப்பர்களுக்கு ஒதுக்கிக்கொடுத்த நிலப்பரப்பின் அளவு எவ்வளவு தெரியுமா, பதின்மூன்றே வீதம்தான்.
 
வெள்ளையர்களுக்கு என்று தனித்தனியாக ஒவ்வொன்றையும் அமைத்துக்கொண்டார்கள். பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள், கட்டடங்கள், பூங்காக்கள் என்று அனைத்தையும், ஆனால் இதற்கு ஒரு கறுப்பு இனத்தவர்கூட உள்ளே வரமுடியாது.
 
இவ்வளவு ஏன் வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் நடப்பதற்குகூட கறுப்பினத்தவர்களுக்கு அனுமதி கிடையாது. இது எப்பேர் பட்ட துயரம் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.
 
இப்படி சொந்த மண்ணிலேயே மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் சிறுபான்மை வெள்ளையர்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும் உயிர்த்தெழுந்த ஞாயிறுதான் நெல்சன் மண்டேலா. இந்த கறுப்பின அடக்குமுறையை தகர்த்தெறிய வேண்டும் என்பது மண்டேலாவிற்கு சிறுவயதிலிருந்தே வளர்ந்துவந்த ஓர் உணர்வு. அதை நடத்தியும் காட்டிவிட்டார் மண்டேலா.
 
வோர்ட் எயார் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. விட்வோட்டர் ஸ்ரன்ட் என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் தன் நண்பரான வோல்டர் சிசிலுவுடன் இணைந்து தென்னாபிரிக்காவின் கறுப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார்.
 
அந்த காலகட்டத்தில் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்.
 
அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரஸின் இளைஞர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கறுப்பினத்தவரின் மீது பொலிஸார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப் பட்டனர். கொதித்தெழுந்த மக் கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்தவே ஆபிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது அப் போதைய தென்னாபிரிக்க அரசு.
 
அதுவரையில் அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவும் அவருடைய கூட்டாளிகளும் ஒரு முடிவெடுத்தார்கள். இனி அகிம்சை வழி போராட்டம் பலன் தராது. அதனால் நாம் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்பதுதான் அந்த முடிவு.
ஆயுதம் ஏந்திப் போராடுவது என்ற முடிவுக்குப் பின் நெல்சன் மண்டேலா நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த நெல்சன் மண்டேலா 1962ஆம் ஆண்டு நாடு திரும்பினார். உடனேயே நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.
 
அவரைக் கைதுசெய்ததற்காக அவர்கள் கூறிய காரணம். நெல்சன் மண்டேலா உரிய ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும் அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றம் விசாரிக்கப்பட்டது, குற்றம்சுமத்தியவர்களே விசாரித்தால் எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்? இறுதியாக வந்தது தீர்ப்பு... என்ன தண்டனை? ஆயுள் தண்டனை!
 
நெல்சன் மண்டேலா என்னும் வேகம் மிக்க இளைஞனை 1964ஆம் ஆண்டு தீவுச்சிறையில் அடைத்தது அப்போதைய தென்னாபிரிக்க அரசு. அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது இனி எந்தப்பிரச்சினையும் இல்லாமல் வெள்ளையர்கள் இருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால்
 
அதன் பிறகு அவர்களுக்கு அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை.
இப்படி ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கினார்கள். என்னவென்றால் நாங்கள் உங்களை உடனே விடுதலை செய்துவிடுகிறோம் ஆனால் நீங்கள் ஒரு நிபந்தனைக்கு உட்படல் வேண்டும்.
என்ன நிபந்தனை தெரியுமா?
 
இனி எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. இந்த ஒற்றை நிபந்தனை ஏற்றுக்கொண்டால் உங்களை விடுதலை செய்துவிடுவோம் என்றனர்.
மண்டேலா கூறிய பதில்... முடியவே முடியாது.
 
முதன்முதலில் கேட்கப்பட்ட ஆண்டு 1973இல். அதன்பிறகு 1983ஆம் ஆண்டு அந்நாட்டு ஜனாதிபதி இந்த நிபந்தனையை முன்வைத்து நெல்சன் மண்டேலாவிடம் கேட்டார். அப்போதும் அவர் சொன்னது முடியவே முடியாது என்றுதான்.
 
இந்த மன உறுதி கறுப்பினத்தவர்களை ஒன்றுபட வைத்து ஊக்கமூட்டியது. இதன்பயனாக நாடெங்கிலும் போராட்டம் வெடித்தது. மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாபிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாபிரிக்காவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டூழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாள் அப்போதைய தென் னாபிரிக்க ஜனாதிபதி கிளார்க் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். இவரின் விடுதலையினால் 1990ஆம் ஆண்டு புனிதமானது.
 
புன்னகையைப் பூத்தபடி வெளியே வந்தார் நெல்சன் மண்டேலா. அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.
 
கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தென்னா பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியானார் நெல்சன் மண்டேலா. அவ்வளவு கொடு மைகளுக்குப்பிறகு ஜனாதிபதியான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......
நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப் பிரிக்கர்கள். பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாபிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்புக் கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்றால் நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும் 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் நோபல் பரிசு பெருமைப்பட்டுக்கொண்டது. 1999ஆம் ஆண்டு அவராகவே ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவு டன் நெல்சன் மண்டேலா ெவள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் அது தப்பில்லை என்று நியாயம் பேசியிருக்கும் காலம். ஏன் நாமும் அதைச் சரியென்றே ஏற்றுக்கொண்டிருப்போம்.
ஆனால் அவர் அப்படி செய்யாததனால் மனிதநேயத்தின் மறுஉருவமாக அவரை பார்த்து அவரின் மரணப் படுக்கையை கண்ணீர்புக்களை இட்டு நிரப்புகிறது உலகம்.
 
மண்டேலா என்னும் மனிதன் இறந்திருக்கலாம். ஆனால் மண்டேலா என்னும் மனிதம் இறக்காது.
 

வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான்.ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது.

பழ.நெடுமாறன் :- வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான்.ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள் சென்றோம். அப்போது எங்களையும் வீரப்பன் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால்,யாராலும் எதுவும்செய்துஇருக்க முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான் விட்டிருக்கும்.நாங்கள் அரசை நம்பி அல்ல…

வீரப்பன் என்ற தனி மனிதனின் நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில் அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்கள் மீதுநடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாம் அறிவோம்.

ராஜ்குமார் கடத்தல் சமயத்தில்‘பாதிக்கப்பட்ட

மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர் ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு இருந்தன. அந்தப் பட்டியலில் வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை.ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி வீரப்பனிடம் கேட்டபோது, ‘என் குடும்பம் அழிந்தது… அழிந்ததுதான்.

நான் இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.அந்தச் சமயத்தில் நான் மொத்தம் ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர்.

எந்த வசதியும் இல்லாத காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது!”