திங்கள், 23 ஆகஸ்ட், 2010

விளாடிமிர் இலீச் லெனின்



விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин ஏப்ரல் 22 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப்புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம்என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது


வாழ்க்கைக் குறிப்பு

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தை இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தார். தாயார் மரியா உல்யானவ். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதரிகள். லெனினுடைய குடும்பம் கலப்பு இனத்தன்மை கொண்டது. இவரது மூதாதையர்கள் ரஷ்யர், மோர்டோவியர், கல்மியர், யூதர், வொல்கானிய ஜேர்மானியர், சுவீடியர் எனப் பலவிதமான இனப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என இவரது வரலாற்றை எழுதியவரான டிமிட்ரி வொல்க்கோகோனோவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார். சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார். 1886 ஆம் ஆண்டு ஜனவரியில் மூளையில் ஏற்பட்ட நோயினால் லெனினின் தந்தையார் இறந்தார். 1887 மே மாதத்தில் லெனினுக்குப் 17 வயதாக இருக்கும்போது, ரஷ்யாவின் ஜார் மன்னனைக் கொல்வதற்கான சதிமுயற்சியில் பங்கு கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலெக்சாண்டர் கைதானபோது அவருடன் இருந்த சகோதரி கிசானிலிருந்து 40 கிமீ தொலைவிலிருந்த கொக்குஷ்கினோ என்னும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகள் லெனினைத் தீவிரவாதி ஆக்கின. இவரது வரலாறுகள், லெனினது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த தீவிரவாதப் போக்குக்கு இதையே அடிப்படையாகக் கூறுகின்றன. பிற்காலத்தில் கோடிக்கணக்கான ரஷ்யப் பாடநூல்களில் இடம்பெற்ற, நாங்கள் வேறு பாதையைப் பின்பற்றுவோம் என்னும் தலைப்பிட்டு, பியோட்டர் பெலூசோவ் என்னும் ஓவியர் வரைந்த புகழ் பெற்ற ஓவியத்தில் லெனினும் அவரது தாயாரும் அலெக்சாண்டரின் இழப்புக்காகத் துயரப்படுவது காட்டப்பட்டுள்ளது. அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.


அரசியல் ஈடுபாடு

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட லெனினும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டார். இதனால் லெனின் பின்னர் கைது செய்யப்பட்டார். இவரது அரசியல் கருத்துக்களுக்காக இவர் பல்கலைக் கழ்கத்திலிருந்தும் விலக்கப்பட்டார். எனினும் படிப்பை அவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார். ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்ட லெனின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். லெனினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே சட்டம்பயின்ற அவர் 1891 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். 1892 ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறிப் பட்டம் பெற்றார். இவர் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்ததோடு, ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றையும் ஓரளவு கற்றிருந்தார். எனினும் பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது பயிற்சி குறைவாகவே இருந்தது. அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக